குடியிருப்புச் சொத்துச் சட்டத்தை மீறிய வெளிநாட்டு ஆடவருக்கு $45,000 அபராதம்

குடியிருப்புச் சொத்துச் சட்டத்தை மீறிய வெளிநாட்டு ஆடவருக்கு $45,000 அபராதம்

2 mins read
4a8f2499-f8ae-4d66-b627-9a70fd11d557
ஈஸ்ட் கோஸ்ட் ரோடு வீடு விற்பனை தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஸான் குவோட்டுவான், 59, ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

குடியிருப்புச் சொத்துச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக சீனக் குடிமகன் ஒருவருக்கு $45,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூர் குடியிருப்புச் சொத்துகளில் வெளிநாட்டினரின் ஊக வர்த்தகத்தைத் தடுப்பதற்கான சட்டம் அது. அவ்வாறு தடுக்கப்படாவிட்டால் வீட்டு விலைகள் உயர்ந்து, அவற்றை வாங்க விரும்பும் சிங்கப்பூரர்களிடையே மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ள ஸான் குவோட்டுவான், 59, குற்றமிழைத்தபோது சிங்கப்பூர் நிரந்தரவாசியாக இருந்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் மூன்று தரை வீடுகளை வாங்க அவர் $6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை வழங்கினார். ‘கட்டுப்படுத்தப்படாத குடியிருப்புச் சொத்துகள்’ என்று வகைப்படுத்தப்படாத வீடுகள் அவை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, அந்த வீடுகளை வெளிநாட்டினர் வாங்க அனுமதி இல்லை.

கடந்த 2007ஆம் ஆண்டு இங்கு இருந்த இரு நிறுவனங்களில் ஸான் பங்குதாரராக இருந்தார். அவ்விரு நிறுவனங்களும் சிங்கப்பூரில் சொத்து மேம்பாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்தன.

தரை வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் கொண்டோமினிய வீடுகளைக் கட்டி, அவற்றை லாபத்திற்கு விற்பதில் அந்த நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தன.

மற்றவர்கள் மூலமாகவும் நிறுவனங்கள் மூலமாகவும் ஸான் மூன்று வீடுகளை வாங்கியது வெளிச்சத்துக்கு வந்தது.

ஸான் 2017ஆம் ஆண்டு சீனா திரும்பும் முன் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தொடர்ந்து 2022ஆம் ஆண்டு அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் அவர் வெளிநாட்டில்தான் இருந்தார். இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி அவர் சிங்கப்பூர் திரும்பினார்.

ஈஸ்ட் கோஸ்ட் ரோடு வீடுகள் விற்பனை தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) ஸான் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக, ஸானுக்கு உதவிய குற்றத்துக்காக டான் ஹுயி மெங் என்னும் 57 வயது சிங்கப்பூரருக்கு ஈராண்டு, மூன்று மாதம், இரு வாரங்கள் சிறைத் தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்