மார்ச்சில் கூட்டுரிமை வீடுகளின் வாடகை சற்று உயர்ந்தது

மார்ச்சில் கூட்டுரிமை வீடுகளின் வாடகை சற்று உயர்ந்தது

2 mins read
d320212c-9e08-4762-bfe6-ec6a42fdde04
பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் மார்ச் மாதம் கொண்டோமினிய வீடுகளின் வாடகை 0.3 விழுக்காடு அதிகரித்தது/ - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கூட்டுரிமை வீடுகள் எனப்படும் கொண்டோமினிய வீடுகளின் வாடகை ஏழு மாத இறக்கத்திற்குப் பிறகு மார்ச் மாதம் சற்று அதிகரித்து உள்ளது.

வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் மீண்டுள்ளதாக எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகிய சொத்துச் சந்தை இணையத்தளங்களின் முன்னோடி மதிப்பீடுகள் குறிப்பிட்டன.

அந்த மதிப்பீடுகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) வெளியிடப்பட்டன.

கொண்டோமினிய வாடகை வீடுகள் மட்டுமின்றி வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீடுகளின் எண்ணிக்கை மார்ச் மாதம் மீண்டதாக அவை தெரிவித்தன.

பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் மார்ச் மாதம் கொண்டோமினிய வீடுகளின் வாடகை 0.3 விழுக்காடு அதிகரித்தது. ஆயினும், ஆண்டு அடிப்படையில் 3.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததை தரவுகள் காட்டின.

மேலும், மார்ச் மாதம் 5,677 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இது பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 19.1 விழுக்காடு அதிகம்.

பிப்ரவரியில் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4,766.

ஆண்டு அடிப்படையிலும் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 14.9 விழுக்காடு அதிகரித்தது. ஆனால், மார்ச் மாதத்திற்கான ஐந்தாண்டு சராசரி எண்ணிக்கையில் 6.9 விழுக்காடு குறைவாகப் பதிவானது.

மத்திய வட்டாரத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் மார்ச் மாதம் அதிகமான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. அந்த மாதம் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளில் 36.4 விழுக்காடு அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவை.

அதற்கு அடுத்தபடியாக, மத்திய வட்டாரத்தைத் தவிர்த்த இதர பகுதிகளில் அதன் விகிதம் 32.6 விழுக்காடு. வாடகைக்கு விடப்பட்ட மொத்த வீடுகளில் 31 விழுக்காடு வீடுகள் மத்திய வட்டாரத்தைச் சேர்ந்தவை.

மத்திய வட்டார வாடகை வீடுகளின் எண்ணிக்கையில் 0.9 விழுக்காடும் எஞ்சிய பகுதிகளில் 0.3 விழுக்காடும் மத்திய வட்டாரத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் 0.3 விழுக்காடும் ஏற்றம் பதிவானது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எல்லா வட்டாரத்திலும் வாடகை குறைந்து உள்ளது. மத்திய வட்டாரத்தில் 5.5 விழுக்காடும் எஞ்சிய வட்டாரத்தில் 2.6 விழுக்காடும் மத்திய வட்டாரத்திற்கு வெளியே 2.1 விழுக்காடும் வாடகை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்