உலக அரங்கில் சிங்கப்பூரின் நன்மதிப்பை உயர்த்தியவர்: பிரதமர் லீக்கு டாக்டர் விவியன் புகழாரம்

உலக அரங்கில் சிங்கப்பூரின் நன்மதிப்பை உயர்த்தியவர்: பிரதமர் லீக்கு டாக்டர் விவியன் புகழாரம்

2 mins read
c38ff1bd-f00e-4ed8-bf37-c15e3e2d4ff6
மணிலாவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பிரதமர் லீக்குப் புகழாரம் சூட்டினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மணிலா: சிங்கப்பூருக்காகப் பல்வேறு கதவுகளைத் திறந்துவிட்டவர் பிரதமர் லீ சியன் லூங் என்றும் அதன் மூலம் உலக அரங்கில் சிங்கப்பூரின் நம்பகத்தன்மை நிலைநாட்டப்பட்டதோடு பல்வேறு வாய்ப்புகள் உருவானது என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாராட்டி உள்ளார்.

பிலிப்பீன்சுக்கு நான்கு நாள் வருகை புரிந்த அவர், தமது பயணத்தின் இறுதியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) மணிலாவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது திரு லீக்கு டாக்டர் விவியன் புகழாரம் சூட்டினார். அப்போது டாக்டர் விவியன் பிலிப்பீன்ஸ் சென்று சேர்ந்திருந்தார்.

பிரதமர் பொறுப்பை மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் அளிக்கப்போவதாக திரு லீ கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.

“பிரதமர் லீயும் அவரது நற்பெயரும் நமக்குப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. அனைத்துலக அரங்கில் நாம் வாய்ப்புகளைப் பெற்றோம் . அது நமக்கு நம்பகத்தன்மையை அளித்துள்ளது,” என்று டாக்டர் விவியன் கூறினார்.

தொடர்ந்து திரு லீ, வெளியுறவுக் கொள்கைகளைக் கையாண்ட விதம் குறித்து டாக்டர் விவியன் குறிப்பிடுகையில், “இயல்பு, நிலைத்தன்மை, ஆக்கபூர்வமான தன்மை, நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கைகளை கடைப்பிடிப்பது திரு லீயின் பாணியாக இருந்தது

“அவை எல்லாம் நமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய கூறுகள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

திரு லீ மதிப்புமிக்க அரசியல் தலைவர் என்று குறிப்பிட்ட டாக்டர் விவியன், அவருக்குக் கீழ் பணியாற்றுவதில் தாம் பெருமையடைவதாகத் தெரிவித்தார்.

திரு லீயின் பதவி ஒப்படைப்புக்குப் பின்னர் டாக்டர் விவியன் வெளியிட்ட முதல் கருத்துரைப்புகள் இவை.

ஆசியான் நிறுவன உறுப்பு நாடுகளான சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் இவ்வாண்டு தங்களுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 55ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.

கடந்த 2004ஆம் ஆண்டு அப்போதைய சமூக வளர்ச்சி, இளையர் மற்றும் விளையாட்டுத் துறையின் தற்காலிக அமைச்சராக டாக்டர் விவியன் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் முழு அமைச்சர் ஆனார் அவர். 2011ஆம் ஆண்டு முதல் சுற்றுப்புற, நீர்வள அமைச்சராகப் பணியாற்றிய பின்னர் 2015ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக டாக்டர் விவியனை பிரதமர் லீ நியமித்தார்.

குறிப்புச் சொற்கள்
வெளியுறவு அமைச்சு