$286,000 மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது

$286,000 மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது

2 mins read
4442e264-9287-48ce-9dbb-8bcdec62f39a
கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஐஸ், ஹெராயின் ஆகியவை 1,280 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வாரத்துக்குத் தேவைப்படும் அளவு என்றும் சிஎன்பி குறிப்பிட்டது.   - படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) ஏப்ரல் 17ஆம் தேதி மேற்கொண்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 45 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நடவடிக்கையில் 2,682 கிராம் ஹெராயின், 29 கிராம் எக்ஸ்டசி, 10 கிராம் ஐஸ் (மெத்தம்பெட்டமின்), 10 கிராம் கஞ்சா, இரண்டு எரிமின்-5 மாத்திரைகள் ஆகிய போதைப் பொருள் சிக்கியது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட $286,000 என்று சிஎன்பி கூறியது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஐஸ், ஹெராயின் ஆகியவை 1,280 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வாரத்துக்குத் தேவைப்படும் அளவு என்றும் சிஎன்பி குறிப்பிட்டது.

ஏப்ரல் 17ஆம் தேதி காலை மெக்பர்சன் ரோட்டுக்கு அருகில் அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டார். அவரிடம் இருந்த கறுப்புப் பையில் 239 கிராம் ஹெராயின் இருந்தது.

பின்னர் ஜாலான் செங்கெக்குக்கு அருகில் இருந்த அந்த ஆடவரின் வீட்டில் எஞ்சியுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. 15 கிராமுக்கு அதிகமாக ஹெராயின் போதைப் பொருள் கடத்துபவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது என்று சிஎன்பி தெரிவித்தது.

இவ்வாண்டு மார்ச் மாதம் தீவு முழுவதும் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் போதைப் பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 17 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களிடமிருந்து $555,000 மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்