பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்புத் தகவல்

பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்புத் தகவல்

1 mins read
c713fdf4-9bee-4dfa-bda0-23cbe0819036
உள்துறை அமைச்சு நடத்திய போதைப்பொருள் எதிர்ப்புக் கருத்தரங்கில் உள்துறை துணை அமைச்சர் முகம்மது பைஷல் இப்ராஹிம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப்பொருள்களுக்கு எதிரான தகவல்கள் அடங்கிய பாடத்திட்டம் பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளது.

இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக 18 வயதை எட்டும் முன்னரே சட்டவிரோத போதைப்பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கும் சூழலில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

“போதைப்பொருள் தடுப்புக் கல்வியை பாடத்திட்டத்தில் உள்ள இதர பாடங்களுக்கும் நமது பள்ளிகள் விரிவாக்கும்,” என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் தெரிவித்து உள்ளார்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “சிங்கப்பூரில் உள்ள மொத்த போதைப்பொருள் புழங்கிகளில் 27 விழுக்காட்டினர் 30 வயதுக்கு உட்பட்ட இளையர்கள்,” என்றார்.

கருத்தரங்கை உள்துறை அமைச்சு நடத்தியது.

போதைப்பொருள் மீதான இளையரின் மனப்போக்கை மாற்ற ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சியும் தேவைப்படுகிறது என்றார் பேராசிரியர் ஃபைஷல்.

போதைப் புழக்கத்தில் ஈடுபடும் இளையரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு 17 விழுக்காடு அதிகரித்திருப்பதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சிங்கப்பூரில் பத்து போதைப்பொருள் புழங்கிகளில் நால்வர் 18 வயதுக்கு முன்னரே அந்தப் பழக்கத்தைத் தொடங்கியதாக 2023ஆம் ஆண்டின் மனநலக் கழக ஆய்வு தெரிவிப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், வளரும் பருவத்தில் போதுமான பக்குவம் இல்லாததால் தவறான பழக்கத்திற்கு அவர்கள் ஈர்க்கப்படுவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்