துபாய் கனமழை: காரில் 8 மணிநேரம் சிக்கித் தவித்த சிங்கப்பூரர்கள்

1 mins read
9f0b394a-66d2-4386-a863-ecac99d77ca1
ஏப்ரல் 17ஆம் தேதி துபாயில் பெய்த கனமழையால் அந்நகரம் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. - படம்: ஜியான்ஹாவ் டான்
multi-img1 of 2

ஏப்ரல் 17ஆம் தேதி பெய்த கனமழையால் துபாய் நகரம் தத்தளித்த நிலையில், சிங்கப்பூரரான ஜியான்ஹாவ் டான், தனது காரில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் சிக்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.

யூடியூப் பிரபலமான அவர், “அதிர்ஷ்டவசமாக நாங்கள் பாதுகாப்பாகத் தப்பினோம். ஒரு கட்டத்தில் மழை நீரின் மட்டம் எங்கள் காரின் சன்னல் வரை இருந்தது,” என்று கூறினார்.

டிக்டாக்கில் அவர் பதிவிட்டுள்ள காணொளியில், பலத்த காற்றால் ஹோட்டல் ஒன்றில் பயணப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிகள் தூக்கி வீசப்படுவதையும் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடுவதையும் காணமுடிகிறது. சாலைகளில் வாகனங்கள் சிக்கியிருப்பதையும் தண்ணீரைத் தவிர்க்க மக்கள் சாலைத் தடுப்புகள் மேல் ஏறி நடப்பதையும் அந்தக் காணொளி காட்டுகிறது.

ஐந்து நாள் விடுமுறைப் பயணமாக மனைவி, நண்பர்களுடன் துபாய் சென்றதாக டான் குறிப்பிட்டார்.

சம்பவ நாளன்று இரவு 9 மணி விமானத்தில் சிங்கப்பூர் திரும்புவதற்காக பிற்பகல் 3 மணியளவில் இக்குழுவினர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு காரில் ஏறினர். பயணப் பெட்டிகளுடன் சற்று நெருக்கியடித்து அமர நேரிட்டது என்று குறிப்பிட்ட டான், ஆனால் எட்டு மணி நேரம் அப்படி இருக்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

மழையோ நின்றபாடில்லை. சமூக ஊடகங்களில் காண நேரிட்ட படங்கள் விமான நிலையம் நீரில் மூழ்கியதைக் காட்டின. எனவே வேறொரு ஹோட்டலுக்குச் சென்றதாகக் கூறிய டான், ஊடகங்கள் மூலம் மற்றவர்களின் சிரமத்தை அறிந்துகொண்டபோது தாங்கள் அதிர்ஷ்டவசமாக அதிக சிரமமின்றி அச்சூழலைக் கடந்ததாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்