தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முஸ்லிம்களின் சமூக, சமயத் தேவைகளுக்குப் புதிய அறக்கட்டளை நிதி

2 mins read
புதிய ‘வகஃப்’ சமூக நிதிக்கான செயற்குழுக்கள் அறிவிப்பு
61870281-0877-4799-a20b-43df4cdc6c4c
வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி இரவு நடந்த வருடாந்திர அமைச்சர் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலில் மலாய்/முஸ்லிம் சமூகத்தினரிடம் புதிய சிங்கப்பூர் சமூக வகஃப் நிதி பற்றி பேசும் அமைச்சர் மசகோஸ். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 3

முஸ்லிம் சமூகத்தின் மாறிவரும் சமூக, சமயத் தேவைகளுக்கு நிதி வழங்க ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் புதிய முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதி அமைக்கப்படவுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இந்நிதிக்குத் திட்டமிட சிங்கப்பூர் சமூக வகஃப் இடைக்காலச் செயற்குழுவையும் நிதித் திரட்டுக்குத் துணைபுரிய இஸ்லாமிய மரபுத் திட்டமிடுதல் செயற்குழுவையும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தொடங்கும்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) இரவு நடந்த வருடாந்திர அமைச்சர் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இதை அறிவித்தார்.

“மலாய்/முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த சொத்துகள் அதிகரித்து வருகின்றன. நம் சமூகத்திற்குக் குறைந்தது $2 பில்லியன் மதிப்பிலான எளிதில் பணமாக்கக்கூடிய சொத்துகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் சேகரிக்கப்படும் $60 மில்லியன் ‘ஜக்காத்’ நன்கொடையின் அடிப்படையில் இது கணிக்கப்படுகிறது.

“இச்செல்வத்தைப் பயன்படுத்த இப்புதிய வகஃப் சமூக நிதியைத் தொடங்க நான் பரிந்துரைத்துள்ளேன்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

சிங்கப்பூர் சமூகத்தில் முஸ்லிம்கள், இஸ்லாமிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நடைமுறைக்கு ஏற்றவாறு தேசிய, சமூக சவால்களை சமாளிக்க அளப்பரிய பங்காற்றியுள்ளனர் என மெச்சினார் அமைச்சர் மசகோஸ்.

மற்ற நாடுகளில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களைப்போல சிங்கப்பூர் முஸ்லிம்கள் நற்பணி ஆற்றி வருவதாக அவர் போற்றினார்.

பிரதமர் லீ சியன் லூங் நாட்டுக்கு ஆற்றிய நெடுநாள் சேவைக்காக அமைச்சர் மசகோஸ் தன் உரையில் புகழாரம் சூட்டினார்.

“மலாய்/முஸ்லிம் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான பந்தத்தை ஆதரித்தவர் பிரதமர் லீ. துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலும் இந்த உறவு தொடர்ந்து நீடிக்கும்,” என அமைச்சர் மசகோஸ் நம்பிக்கையோடு கூறினார்.

துணைப் பிரதமர் வோங்கும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்னும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகையளித்தனர்.

கிட்டத்தட்ட 300 சமூக, சமயத் தலைவர்கள், சமய போதகர்கள், சமூகப் பங்காளிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரும் வந்திருந்தனர்.

முஸ்லிம் ‘ஷரியா’ சட்டத்திற்கேற்ப செயல்பாடுகளுக்கு செலுத்தப்படும் நன்கொடையே ‘வகஃப்’.

திரட்டப்படும் நிதி, சொத்துச் சந்தை, அபாயம் குறைந்த துறைகளில் முதலீடு செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் லாபம், வகஃப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும். அசல் தொகை தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

இந்நிதிக்காகத் திட்டமிடும் சிங்கப்பூர் சமூக வகஃப் இடைக்காலச் செயற்குழுவிற்கு ஓய்வுபெற்ற அனுபவமிக்க வங்கியாளர் பாஹ்ரென் ஷாரி, 62, தலைமை வகிப்பார். இஸ்லாமிய மரபுத் திட்டமிடுதல் செயற்குழுவிற்கு மூத்த வழக்கறிஞர் ஸுல்கர்னெய்ன் அப்துல் ரஹீம், 44, தலைமை தாங்குவார்.

முதலீடு, சொத்துச் சந்தை, சட்டம், நிதி நிர்வாகம், சமய வழிகாட்டல் போன்ற துறைகளிலிருந்து நிபுணர்கள் செயற்குழுக்களில் இடம்பெறுவர். அவர்கள் பின்னொரு நாளில் அறிவிக்கப்படுவர்.

முயிஸ், ஆகஸ்ட் மாதத்தை ‘வகஃப்’ மாதமாக அனுசரிக்கும். அப்போது சிங்கப்பூர் சமூக வகஃப் நிதியின் தொடக்கத்தோடு, புதிய வகஃப் மரபுடைமைப் பாதை, ‘ஃபரேய்ட்’ கருத்தரங்கு, உரைகள் என பல நிகழ்ச்சிகளும் மாதம் முழுவதும் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்