தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்கள் தொடர்பான செயலி ஊடுருவப்பட்டது

2 mins read
3de88893-80cc-434d-bc72-0c112ef2d406
127 தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அமைச்சு கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

மாணவர்களின் தனிப்பட்ட சாதனங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தெரிவித்தது.

ஐந்து தொடக்கப்பள்ளிகள், 122 உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளில் மூன்றில் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளன.

குரோம்புக் மடிக்கணினி, ஐபேட் கைக்கணினி உட்பட மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொபைல் கார்டியன் செயலி ஊடுருவப்பட்டதில் அதில் இருந்த தகவல்கள் வெளியே கசிந்ததாகத் தெரியவந்துள்ளது.

மாணவர்களின் சாதனப் பயன்பாட்டை நிர்வகிக்கவும் குறிப்பிட்ட இணையப்பக்கங்களுக்குப் போக முடியாதபடி தடுக்கவும் சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தச் செயலி உதவுகிறது.

இந்நிலையில், மொபைல் கார்டியனின் தலைமையகத்தில் இந்த ஊடுருவல் நிகழ்ந்ததாக அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பெற்றோர், ஆசிரியர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சு கூறியது. அவர்களிடம் மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படக்கூடும் என்பதால் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த இணைய ஊடுருவல் பற்றி ஏப்ரல் 17ஆம் தேதியன்று மொபைல் கார்டியன் தன்னிடம் தெரிவித்ததாகக் கல்வி அமைச்சு கூறியது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

மொபைல் கார்டியனின் தலைமையகம் பிரிட்டனில் உள்ளது. அமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் அதற்கு அலுவலகங்கள் உள்ளன.

இந்த இணைய ஊடுருவலுக்குப் பிறகு, அந்நிறுவனம் தனது நிர்வாகக் கணக்குகளின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறது.

கல்வி அமைச்சின் குறிப்பிட்ட சில சாதனங்கள் தொடர்பான சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரபூர்வ நிறுவனமாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொபைல் கார்டியன் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்குச் சொந்தமான சாதனங்கள் நிர்வாகத் தளம் ஊடுருவப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதை மாணவர்களின் குரோம்புக் மடிக்கணினி அல்லது ஐபேட் கைக்கணினிகள் மூலம் பெற்றோர் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்