உக்ரேன் படையெடுப்புக்குப் பணம் அனுப்ப சாங்கியில் $88 மி. தங்கம் வாங்கிய ரஷ்யர்

உக்ரேன் படையெடுப்புக்குப் பணம் அனுப்ப சாங்கியில் $88 மி. தங்கம் வாங்கிய ரஷ்யர்

1 mins read
4ff54ed5-18fe-4dc6-859f-82d044f521e0
‘சிங்கப்பூர் பிரெஷியஸ் மெட்டல்ஸ் எக்ஸ்சேஞ்ச்’ எனும் நிறுவனத்திடமிருந்து ஃபிலிக்ஸ் மெட்வடேவ் தங்கம் வாங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்ய ராணுவத்துக்குப் பணம் அனுப்பிவைக்கும் நோக்குடன் ரஷ்ய ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் 65 மில்லியன் அமெரிக்க டாலர் (S$88 மில்லியன்) பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கி ரஷ்ய ராணுவத்துக்குப் பணம் அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் 43 வயது ஃபிலிக்ஸ் மெட்வடேவ் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்மீது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதியன்று அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டது.

உரிமம் இல்லாது பணம் அனுப்பும் வர்த்தகத்தில் ஈடுபட்டது, 1,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மூலம் 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணத்தை அனுப்பி வைத்தது என தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

மே 7ஆம் தேதியன்று மெட்வடேவுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சிங்கப்பூர் பிரெஷியஸ் மெட்டல்ஸ் எக்ஸ்சேஞ்ச்’ எனும் நிறுவனத்திடமிருந்து மெட்வடேவ் தங்கம் வாங்கினார். அது தங்கக் கட்டிகளை சாங்கி நார்த் கிரசெண்ட்டில் உள்ள ‘லே ஃபிரீபோர்ட்’ எனும் தளவாட மையத்தில் வைத்துள்ளது.

அந்த நிறுவனத்திடமிருந்து தங்கக் கட்டிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்தத் தளவாட மையத்துக்கு நேரில் சென்று தங்களது தங்கக் கட்டிகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

தனியுரிமைச் சட்டம் காரணமாக இந்த விவகாரம் குறித்து தகவல்களை வெளியிட முடியாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சிங்கப்பூர் பிரெஷியஸ் மெட்டல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூறியது.

குறிப்புச் சொற்கள்