பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தும் தனது கணவரின் பழக்கத்தை நிறுத்த ஏமி (உண்மை பெயரல்ல) கடுமையாகப் போராடி வருகிறார். ஆனால் அது கைகொடுப்பதாகத் தெரியவில்லை.
தனது கணவர் தவறானவர்களுடன் சேர்ந்து 2019ஆம் ஆண்டிலிருந்து வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார் என்று 20 வயதுகளில் உள்ள ஏமி கூறினார்.
கணவரின் பழக்கம் மோசமாகி, 2021ல் அவர் வேலைக்குப் போவதை நிறுத்தினார். ஏமி கர்ப்பமான செய்தி அறிந்து சிறிது காலத்துக்குப் பிறகு அவர் தாமாகவே கருக்கலைப்பு செய்துகொண்டார்.
“பிறக்கப் போகும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அவர் பொறுப்பேற்றுக்கொள்ளாத காரணத்தால் நான் கருக்கலைப்பு செய்துகொண்டேன். அப்போதும்கூட அவர் என்னுடன் மருந்தகத்துக்கு வரவில்லை,” என்று ஏமி சொன்னார்.
“நான் கருக்கலைப்புக்கு மருந்தகத்துக்குச் சென்றபோதுகூட அவர் மாத்திரைகளையும் இருமல் மருந்தையும் உட்கொண்டிருந்தார். அவரால் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை, இப்போதும்கூட.
“அவர் காவல் நிலையத்துக்கும் மனநலக் கழகத்துக்கும் பல்வேறு முறை சென்று வந்துள்ளார். டெலிகிராம் செயலி மூலம் விற்கப்படும் இருமல் மருந்து, ட்ராமடோல், லிரிக்கா போன்ற வலி நிவாரணி மாத்திரைகள், வேலியம், மிடஸோலம் போன்ற மயக்க மருந்துகள் ஆகியவற்றை என் கணவர் அதிகமாக நாடுகிறார்.
“சில சமயம் கேலாங்கில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதிக்குச் சென்று அங்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துகளை வாங்கி வருவார்,” என்றும் ஏமி விவரித்தார்.
ஏப்ரல் 18ஆம் தேதியன்று கேலாங் லோரோங் 22ல் இத்தகைய பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை ஆடவர்கள் இருவர் வெளிப்படையாக விற்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்தது. மேலும் தனது கணவருக்கும் டெலிகிராம் மூலம் மருந்துகளை விற்பவர்களுக்கும் இடையிலான குறுஞ்செய்தி பரிமாற்றத்தையும் ஏமி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
டெலிகிராம் தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு விற்பனை பதிவு செய்த பின், அந்த பெயர்குறிப்பிடப்படாத மருந்துகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தப் பழக்கம் குறித்து கருத்துரைத்த ‘இம்பார்ட்’ எனும் இளையர் மனநல நன்கொடை அமைப்பின் தலைமை இயக்குநர் நரசிம்மன் திவாசிஹா மணி, “கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகமான இளையர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.
இந்தப் பழக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ள இளையர்கள், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று தம்மிடம் உதவி கேட்டு வருகிறார்கள் என்று 40 வயதாகும் திரு மணி கூறினார்.
“கள்ளத்தனமாக விற்கப்படும் மருந்துகளைவிட, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. சமூக ஊடகமும் உரையாடல் தளங்களும் இத்தகைய மருத்துகள் எளிதில் கிடைக்க வழி ஏற்படுத்தித் தருகின்றன ,” என்று உளவியல் சிகிச்சை நிலையத்தின் மூத்த ஆலோசகர் கோபால் மகேய் தெரிவித்தார்.
“மருத்துவர் அல்லது மருந்தாளரின் ஆலோசனையின்றி உட்கொள்ளப்படும் இந்த மருத்துகளால் ஆபத்து நேரக்கூடும் என்று எச்சரித்த சுகாதார அறிவியல் ஆணையம், தகுந்த உரிமம் இல்லாமல் மருந்துகளை இறக்குமதி செய்யும், விற்பனை செய்யும். விநியோகம் செய்யும் குற்றவாளிகளுக்கு $50,000 வரையிலான அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறையும் தண்டனையாக விதிக்கப்படலாம் என்றும் சுட்டியது.

