தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலைய இரண்டாம், ஐந்தாம் முனையங்களை இணைக்க நிலத்தடிப் பாதை

2 mins read
14b24874-8cea-47f2-83fd-137a613aa233
1,080 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் ஐந்தாம் முனையம் 2030ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சாங்கி விமான நிலையம்

சாங்கி விமான நிலையத்தை மேலும் மெருகேற்றும் விதமாக தற்போதுள்ள இரண்டாம் முனையத்தையும் எதிர்காலத்தில் சேவைக்கு வரவுள்ள ஐந்தாம் முனையத்தையும் இணைக்கும் விதமாக 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் நிலத்தடி இணைப்பு பாதை கட்டப்படவுள்ளது.

தற்போது விமான நிலையத்தில் முனையங்களை இணைக்கும் ரயில் சேவை (ஸ்கை ட்ரெயின்) போல் அந்த இணைப்புப் பாதை இருக்கும்.

புதிய பாதை மூலம் விமான நிலையத்தில் உள்ளவர்கள் இரு முனையங்களுக்கு இடையே எளிதாக பயணம் மேற்கொள்ளலாம். மேலும், பயணிகளின் பயணப்பைகளை கையாளவும் அந்த இணைப்புப் பாதையில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1,080 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் ஐந்தாம் முனையம் 2030ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாம் முனையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது இத்தகவலை ஆணையம் கொடுத்தது.

தற்போது இணைப்புப் பாதைக்கான முன்னேற்பாடு வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் ஆணையம் தெரிவித்தது.

பாதைக்கான கட்டுமானப் பணிகளைச் சீன நிறுவனமான ‌‌‌ஷாங்காய் டனல் எஞ்ஜினியரிங் செய்கிறது. இணைப்புப் பாதை 2028 அக்டோபர் மாதம் தயாராகும் என்று கூறப்படுகிறது.

இணைப்புப் பாதைக்காக பல சுரங்கவழிகளைத் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்ட சாங்கி விமான நிலையத்திற்கு இந்த இணைப்புப் பாதை கூடுதல் பலம் சேர்க்கிறது. இதனால் இரண்டு முனையங்களுக்கு இடையில் எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும். அத்துடன், பயணிகளுக்கு இது பல வழிகளில் உதவக்கூடும் என்று ஓஏஜி ஏவியே‌‌ஷனின் மூத்த அதிகாரி மயூர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஐந்தாம் முனையம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 காரணமாக அதன் திட்டங்களில் தாமதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் கட்டுமான வேலைகளுக்கான முன்னேற்பாடுகள் 2022ஆம் ஆண்டு தொடங்கியது. கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு முழுவீச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாம் முனையம் சேவையைத் தொடங்கிவிட்டால் அது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடும்.

குறிப்புச் சொற்கள்