ரயில் பாதையின் புவன விஸ்தா முனை திறப்பு

ரயில் பாதையின் புவன விஸ்தா முனை திறப்பு

2 mins read
தஞ்சோங் பகார் ரயில் நிலையத்துக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
3ad9562e-e72b-4639-8ff0-30172e2c6360
ரயில் பாதையின் புவன விஸ்தா முனையில் விளையாட்டுத் திடல், உடலுறுதிப் பயிற்சியிடங்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கான வசதிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ரயில் பாதையின் புவன விஸ்தா முனை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

உடலுறுதிப் பயிற்சியிடங்கள், விளையாட்டுத் திடல், புல்வெளி போன்றவை அங்கு இடம்பெற்றுள்ளன.

நார்த் புவன விஸ்தா ரோடு, காமன்வெல்த் அவென்யூ ஆகியவற்றுக்கு இடையிலான சாலைச் சந்திப்பில் 1.6 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புதிய சமூக முனையை ஏப்ரல் 22ஆம் தேதி தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திறந்து வைத்தார்.

ஹாலந்து ரோட்டிலிருந்து தஞ்சோங் பகார் வரை அமையும் ரயில் பாதையின் தென்பகுதியில் உள்ள முதல் சமூக முனை இது.

திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் லீ, முன்னாள் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தை இன்னும் ஒன்பது ஆண்டுகளில் எவ்வாறு கட்டமைக்கலாம் என்பது பற்றிய யோசனைகளை அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கும் இரண்டாவது போட்டி குறித்து அறிவித்தார்.

அந்த இடத்தைத் துடிப்பு மிக்க பல பயன்பாட்டுச் சமூகக் கட்டடமாக மாற்ற இயலும் என்றார் அவர்.

தஞ்சோங் பகார் ரயில் நிலைய உருமாற்றத் திட்டத்துக்கான முதல் போட்டி 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. மரபுடைமைக் காட்சிக்கூடம் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்த எம்கேபிஎல் ஆர்க்கிடெக்ட்ஸ்-டுரென்ஸ்கேப் இன்டர்நேஷனல் குழுவிற்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வேளையில், 24 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதை முழுவதற்குமான பெருந்திட்டப் பரிந்துரையும் வரவேற்கப்படுவதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது போட்டிக்கான பரிந்துரைகளை ஏப்ரல் 22 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை முன்வைக்கலாம்.

பொதுமக்கள், மாணவர்கள், செயல்முறை வல்லுநர்கள் என அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம்.

ரயில் நிலையத்தின் மூன்று மாடிக் கட்டடத்தை உள்ளடக்கிய அந்த 6.4 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை எவ்வாறு பயன்படுத்தலாம், எத்தகைய நடவடிக்கைகளுக்கு அதைப் பயன்படுத்தலாம், புதிய கட்டடங்கள் ஏதேனும் அங்கு கட்டப்படலாமா, அந்த நிலப்பகுதியையும் அதைச் சுற்றியுள்ள பசுமையான பகுதியையும் மேம்பட்ட முறையில் இணைப்பதற்கான வழிகள் போன்ற அம்சங்கள் குறித்து அவர்கள் பரிந்துரைக்கலாம்.

போட்டி குறித்த மேல் விவரங்களுக்கு go.gov.sg/TPRSIdeasCompetition என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்
ரயில் நிலையம்