தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20 மாதச் சிறுமியைத் துன்புறுத்தியதாகக் குழந்தைப் பராமரிப்பு நிலைய முன்னாள் ஊழியர்மீது குற்றச்சாட்டு

2 mins read
பாலர் பள்ளித் துறையில் பணியாற்றத் தடை
ba37b473-0161-4137-90ef-a32e45a01be2
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குழந்தைப் பராமரிப்பு நிலைய முன்னாள் ஊழியர் ஒருவர், 20 மாதப் பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக ஏப்ரல் 22ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த 33 வயதுப் பெண், சிங்கப்பூரின் வடபகுதியில் உள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார்.

சிறுமி தடுக்கி விழக் காரணமாக இருந்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பாலர்பள்ளித் துறையில் பணிபுரிய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

சிறுமியின் பெயரையும் அந்த நிலையத்தின் பெயரையும் வெளியிட அனுமதி இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் பெயரும் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூரரான அந்தப் பெண்மீது குழந்தையைத் துன்புறுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் கடந்த நவம்பர் 6ஆம் தேதி பிற்பகல் 12.28 மணியளவில் குழந்தையின்முன் காலை நீட்டி அவளைத் தடுக்கிவிழச் செய்ததாகக் கூறப்பட்டது.

சில நிமிடங்கள் கழித்து அப்பெண் மீண்டும் அதேபோலச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் சிறுமி தடுக்கி விழுந்ததாகவும், அப்பெண்ணின் செயலால் சிறுமிக்குத் தேவையற்ற காயங்களும் வலியும் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்திருப்பதாக ‘இசிடிஏ’ எனப்படும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியதாக சிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த மறுநாள் தங்கள் மகளின் முகத்தில் காயம் இருந்ததாகச் சிறுமியின் பெற்றோர் அமைப்பை நாடியதாகத் தெரிகிறது.

அமைப்பு உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. முன்னறிவிப்பின்றி அந்த பாலர் பள்ளிக்குச் சென்று, முக்கிய சாட்சிகளை விசாரித்ததுடன் பதிவேடுகளைச் சரிபார்த்தது.

சம்பவத்தை அடுத்து, குழந்தையைத் துன்புறுத்திய பெண் அந்த நிலையத்தில் பணியாற்றவில்லை.

குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு, அவர் இனி பாலர்பள்ளித் துறையில் பணியாற்றத் தடை விதித்திருப்பதாக அமைப்பு கூறியது.

குற்றம் சாட்டப்பட்ட பெண் தான் தவறேதும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கு மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குழந்தையைத் துன்புறுத்தியது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ S$8,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்