ஸ்பெயினில் கொலை: கைது செய்யப்பட்டவர் அடிக்கடி வெளிநாடு செல்வார்

1 mins read
24be22f9-ba2b-46f9-aa54-1266395c25d6
ஸ்பெயின் ஊடகங்களால் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட மிட்சல் ஓங், ஏப்ரல் 16ஆம் தேதி ஸ்பெயினில் அலிகான்டேயில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். - படம்: இபிஏ

ஸ்பெயினில் கொல்லப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டடக் கலை கலைஞர் ஆட்ரி ஃபாங்கின் மரணத்தில் தொடர்புடையவராகக் கருதப்படுபவர் வர்த்தகம் தொடர்பாகவும் நடன விருந்துகளில் கலந்துகொள்ளவும் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றதாக அவருக்கு அறிமுகமானவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் சந்தேக நபராக ஸ்பானிய ஊடகங்களால் ஏப்ரல் 20ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட சிங்கப்பூரரான மிட்சல் ஓங் உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர் என்றும் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்கு வாரம் மூன்று முதல் ஐந்து முறையாவது வருவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தன்னைப் பற்றிய அடையாளம் தெரிவிக்க மறுத்த ஒருவர், மிட்சல் ஓங் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வது தெரியும் என்றார்.

“அவருடன் பல முறை உரையாடியிருக்கிறேன். அவர் நல்ல முறையில் பேசினார். வெளிநாடுகளுக்குச் செல்வது அவருக்கு விருப்பமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

ஓங்கின் இன்ஸ்டகிராம் கணக்கைப் பார்த்தபோது அவர் வெளிநாடுகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன. 2022க்கும் 2024க்கும் இடையே அவர் ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் சென்றுள்ளார்.

அண்மைய பதிவில் ஏப்ரல் 4ஆம் தேதி அலிகான்டேவுக்குச் சென்றதாக அவர் பகிர்ந்துகொண்டார். அதே நாளில்தான் எண்பது கிலோ மீட்டர் தொலைவில் ஸ்பெயினில் உள்ள நகரமான ஸாபியாவுக்கு ஆட்ரி ஃபாங் தனியாகச் சென்றிருந்தார்.

தனது உயரம் 1.88 மீட்டர் என்று இஸ்டகிராமில் குறிப்பிட்டிருந்த திரு ஓங், ஏப்ரல் 16ஆம் தேதி அலிகான்டேயில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்