தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்தூக்கிச் சுரங்கத்தில் மாண்ட வெளிநாட்டு ஊழியர் மதுபானம் குடித்திருந்தார்

2 mins read
20851128-f9d6-427e-8aff-b6b46d9531a2
வரதராஜூ பத்தவைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 6 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். - படங்கள்: வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம்

அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டு ஊழியரான வரதராஜூ சுந்தராஜன் கீழே விழுந்து மாண்டார்.

சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இரவு நடந்தது. அப்போது இந்தியாவைச் சேர்ந்த 39 வயது வரதராஜூ இரவு பணியில் இருந்தார்.

கடைத் தொகுதியில் புதிதாகத் திறக்கப்படும் கடை ஒன்றுக்கு மின்தூக்கி சேவைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. மின்தூக்கிச் சுரங்கத்தில் பத்தவைப்பு வேலையில் வரதராஜூ ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

ஏப்ரல் 18ஆம் தேதி பின்னிரவு 12.30 மணி வாக்கில் வரதராஜூ 6 மீட்டர் உயரத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார்.

சுயநினைவு இழந்த ஆடவர் டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆடவரின் மண்டை ஓட்டில் பல எலும்பு முறிவுகள் இருந்தன. மூளையில் வீக்கம், விலா எலும்பு முறிவு, கணையத்தில் காயமும் இருந்தது.

பல காயங்கள் காரணமாக அன்று காலை 6.10 மணிக்கு வரதராஜூ உயிரிழந்தார்.

உயரத்தில் இருந்து வேலை செய்தபோது வரதராஜூ பாதுகாப்புச் சாதனங்கள் ஏதும் அணியவில்லை என்று மனிதவள அமைச்சின் ஆரம்பக்கட்ட விசாரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடற்கூராய்வு செய்த போது ஆடவரின் உடலில் அதிக அளவில் மதுபானம் இருந்தது என்று வழக்கை விசாரித்த மரண விசாரணை நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி-சனாஸ் தெரிவித்தார்.

மது போதையில் தான் வரதராஜூ தடுமாறி கீழே விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்தூக்கிச் சுரங்கத்தில் ஏறுவது குறித்து தனது மேல் அதிகாரியிடம் வரதராஜூ சொல்லவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆடவரின் 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 178 மில்லிகிராம் மது இருந்தது.

வரதராஜூ ‘ஃபாங் ஹாங் இன்ஜினியரிங்’ என்னும் நிறுவனத்திற்கு 2016ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஃபாங் ஹாங் இன்ஜினியரிங்’ நிறுவனம் கட்டுமான இடத்தில் இடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி இருந்ததும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வரதராஜூ மரணம் தொடர்பாக அவரின் சகோதரருக்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். வரதராஜூ அவ்வப்போது மது குடிப்பார் என்று அவரது சகோதரர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்