தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் அடக்கம்

2 mins read
e21a54d1-eedd-45b5-89a5-9a8d688b393e
தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவி அஃபிஃபா முனிராவுக்காக பாசிர் ரிசில் உள்ள அவருடைய வீட்டிற்கு அருகே உள்ள பன்னோக்கு மண்டபத்தில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

நோன்புப் பெருநாள் கொண்டாடி இரண்டு வாரங்கள் நிறைவுபெறாத வேளையில், சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிலைக்கு இரு குடும்பங்கள் தள்ளப்பட்டன.

இறந்தவர்களின் கல்லறைகள் அடுத்தடுத்து இருந்தன.

தெம்பனிசில் திங்கட்கிழமை (ஏப்ரல் 22) நிகழ்ந்த ஆறு வாகன சாலை விபத்தில் திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப், 57, அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்ரில், 17, இருவரும் உயிரிழந்தனர். அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

திருவாட்டி நூர்ஸிஹானின் குடும்பம், விபத்து நிகழ்வதற்கு முந்தைய நாள்தான் செங்காங்கில் உள்ள அவரது புதிய வீட்டில் நோன்புப் பெருநாளைக் கொண்டாடியதாக இடுகாட்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவருடைய உடன்பிறப்பின் மகள் கூறினார்.

அத்திகா, 26, என்று மட்டுமே அறியப்பட விரும்பும் அவர், திருவாட்டி நூர்ஸிஹான் தனியாக வசித்து வந்ததாகவும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் புதிய வீட்டிற்குள் குடிபுகுந்ததாகவும் சொன்னார்.

“செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நாங்கள் மனமுடைந்து போனோம். அவரது புதிய வீட்டில் அதுவே முதலாவது மற்றும் கடைசி நோன்புப் பெருநாளாக இருந்தது,” என்று அத்திகா கூறினார்.

திருவாட்டி நூர்ஸிஹானில் உடல் மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய 79 வயது தாயார் உட்பட சுமார் 50 பேர் கல்லறையில் திரண்டனர்.

குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒரு மகிழ்ச்சியான, பரிவுமிக்க மனிதராக நினைவுகூர்ந்தனர். தாயார் மீதும் எட்டு உடன்பிறப்புகள் மீதும் அவர் அன்பு காட்டினார்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை குடும்பத்தார் ஏற்றுக்கொண்டுள்ளதாக திருவாட்டி நூர்ஸிஹானின் சகோதரர் முகம்மது சனி, 48, கூறினார்.

“இது இறைவனின் கைகளில் உள்ளது. நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. இது ஏற்கெனவே இறைவனால் எழுதப்பட்டுவிட்டது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். என் தாயாரும் இந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்கிறார்,” என்றார் அவர்.

பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான வேனில் திருவாட்டி நூர்ஸிஹான் இருந்தபோது விபத்து நிகழ்ந்தது. மூத்த தொழில்நுட்பரான அவர், அந்நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

Watch on YouTube

விபத்தில் இறந்த மற்றொருவரான அஃபிஃபா, தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியாவார். அவரது உடல் மாலை 6.15 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

கடலோர காவல்படை அதிகாரியான அவருடைய தந்தை முகம்மது அஸ்ரில், அஃபிஃபாவை பள்ளி நிகழ்வு ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது விபத்து நிகழ்ந்தது. திரு அஸ்ரிலுக்கு சிறுநீரகம், முதுகுத்தண்டு தொடர்பான காயங்கள் ஏற்பட்டன. விபத்தில் குப்புறக் கவிழ்ந்த திரு அஸ்ரிலின் கார் மோசமாக சேதமுற்றது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலிருந்து அஃபிஃபாவின் உடலைப் பெற பாசிர் ரிசில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே 250க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

குறிப்புச் சொற்கள்