தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாடுகளில் கால் பதிக்கும் சிங்கப்பூரின் நிறுவனங்கள்

2 mins read
a8f31d79-e1df-4242-98bd-fddd8b8ca844
சிங்கப்பூரில் நடைபெற்ற கண்காட்சியில் (இடமிருந்து) சேட்ஸ், ஃபுட் சொல்யூஷன்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டான்லி கோ, அமைச்சர் லோ யென் லிங், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் துணை நிர்வாக இயக்குநர் ஜோயன் டான், சேட்ஸ் சமையல் நிர்வாகி மேத்தியு யிம் உட்பட பலர் இருக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கு பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.

2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் உணவு ஏற்றுமதி ஆண்டுக்கு 11 விழுக்காடு விகிதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல், உலக முழுவதும் உள்ள 120 சந்தைகளில் அவை காணப்படுகின்றன என்று சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் 2023ஆம் ஆண்டின் உற்பத்தித் துறை ஆய்வை சுட்டிக்காட்டி வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் தனிச்சிறப்புமிக்க உணவு கலாசாரம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை உணவு, பானத் துறையின் அதிக நிறுவனங்கள் அனைத்துலக சந்தைகளில் நுழைய வாய்ப்பு அளித்துள்ளன என்று அமைச்சர் லோ மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற அனைத்துலக உணவு, பானத் துறை கண்காட்சியில் அவர் பேசினார்.

உதாரணமாக, அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது.

இத்தகைய ஒப்பந்தம், குறைவான வரியுடன் உணவு, பானத்துறை ஏற்றுமதியாளர்கள் சந்தையில் நுழைய வழி வகுத்துள்ளது.

‘வர்த்தகம் 2030’ உத்தியின்கீழ் சிங்கப்பூரின் உணவு ஏற்றுமதிக்கு உதவ இன்னும் பல இடங்களுக்கு தங்குத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை தொடர்ந்து விரிவுபடுத்துவோம்,” என்று அமைச்சர் லோ குறிப்பிட்டார்.

ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 26ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் உணவு உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய பொருள்களை காட்சிக்கு வைத்துள்ளன. உள்ளூர், அனைத்துலக வருகையாளர்கள் 60,000 பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரங்காடிகள், உணவு விநியோகிப்பு நிறுவனங்கள், உணவகம், ஹோட்டல் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்