தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் விபத்து: ஓட்டுநர் கைது, ஏப்ரல் 25ல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்

2 mins read
43c79da9-8b50-472c-b6d0-ed8e39c884b5
விபத்து நிகழ்ந்த சாலைச் சந்திப்பில் உள்ள போக்குவரத்து விளக்கிற்கு அடியில் மலர்கொத்துகளை வைத்து மாண்டவர்களுக்கு தெமாசெக் தொடக்கக்கல்லூரி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். - படம்: சாவ்பாவ்

தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த விபத்துக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் 42 வயது கார் ஓட்டுநர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று திரும்பியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரது வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் காரணமாக இருவர் மாண்டனர்.

மரணமடைந்த தெமாசெக் தொடக்கக்கல்லூரி மாணவியான 17 வயது அஃபிபா முனிரா முகம்மது அஸ்‌ரில், 57 வயது திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப் ஆகியோரின் நல்லுடல்கள் ஏப்ரல் 23ஆம் தேதியன்று சுவா சூ காங் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டன.

விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 11 வயது சிறுவர்கள் இருவர் அடங்குவர்.

விபத்தில் நான்கு கார்கள், ஒரு வேன், ஒரு சிற்றுந்து ஆகியவை சேதமடைந்தன.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

விபத்து நிகழ்ந்தபோது திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப் வேலையை முடிந்து வேனில் பயணம் செய்துகொண்டிருந்தார். விபத்தில் வேனின் வலதுபுறம் மிக மோசமாக நசுங்கியது.

அஃபிபா முனிரா, தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் முதல் ஆண்டு மாணவியாவார். இவர், கல்லூரி நிகழ்ச்சிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்.

கடலோரக் காவல்படை அதிகாரியான அவருடைய தந்தை திரு முஹம்மது அஸ்ரில் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது ​​ஏற்பட்ட விபத்தில் கார் கதவுகள் திறந்த நிலையில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.

அவருக்கு சிறுநீரகம், முதுகெலும்பு தொடர்பான காயங்கள் ஏற்பட்டு இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரில் சிக்கியிருந்த நிலையில் முகம்மது அஸ்ரில் தமது மகளின் பெயரை சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருந்ததாக திரு ஷேக் இம்ரான் ஷேக் அகமது சொன்னார்.

விபத்தின்போது காயம் அடைந்தவருக்கு உதவி புரிந்து சாலைப் போக்குவரத்தை சீர்படுத்திய ஷேக் இம்ரான் ஷேக் அகமது, வயது 40, இந்த சம்பவத்திலிருந்து தாம் இன்னமும் மீளவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் புதன்கிழமை கூறினார்.

இதற்கிடையே, விபத்தில் மாண்டோரின் குடும்பத்தினரிடம் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

விபத்தில் இரண்டு பேர் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

வாகனம் ஓட்டும்போது சாலையைப் பயன்படுத்தும் பிறரின் நலன் கருதி அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படாதபடி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

ஆறு வாகனங்களில் மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரில்  ஒருவரான அஃபிஃபா முனிரா.
ஆறு வாகனங்களில் மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரில் ஒருவரான அஃபிஃபா முனிரா. - படம்: அஃபிஃபா இன்ஸ்டகிராம்
குறிப்புச் சொற்கள்
விபத்துமரணம்கைது