தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோருக்காக புதிய மனநல நிலையம் திறப்பு

2 mins read
eba95b51-42ad-429b-a622-4d1c3a1e4b10
ஹேக் ரோட்டிலுள்ள சன்லவ் மனநல நிலையத்தின் திறப்பு. - படம்: சன்லவ் இல்லம்

முதியோர் சென்று இளைப்பாறவும் துடிப்புடன் இருக்கவும் சன்லவ் முதியோர் நல அமைப்பு, காத்தோங் வட்டாரத்தில் புதிய நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது.

புளோக் 4 ஹேக் ரோட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) திறக்கப்பட்ட இந்தப் புதிய நிலையத்தில் முதியோருக்கான மருந்தகமும் பல் பரிசோதனை நிலையமும் உள்ளன. அத்துடன், மனநலம் மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் அந்நிலையத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

முதுமை மறதி நோய் உள்ளோர் மீது இந்நிலையம் கவனம் செலுத்தும். ஒரே நேரத்தில் 70 முதல் 80 பேர் வரை இங்கு வரலாம்.

நிலையத்தில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் செயலாற்றுவர் என்று சன்லவ் இல்லம் தமிழ் முரசிடம் தெரிவித்தது. அத்துடன், 60 வகையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என்றது அந்த இல்லம்.

மனநலனை அளவிடும் ‘ஏஎம்டி’ சோதனையை நிலையத்திற்கு வரும் முதியவர்கள் மேற்கொள்ளலாம் என்று சன்லவ் இல்லத்தின் உதவி நிர்வாகி மகாலட்சுமி அண்ணாமலை தெரிவித்தார்.

“இந்தச் சோதனையின் முடிவுகளை அறிந்து நாங்கள், தேவையுள்ள முதியோருக்கு மனநல நிபுணர்களின் சேவைகளுக்கு பரிந்துரை செய்வோம். முதுமையில் வரும் மறதி நோயை வருமுன் காப்பதற்கும் ஏற்கெனவே அந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கவும் இது கைகொடுக்கும்,” என்றார் திருவாட்டி மகாலட்சுமி

உடற்பயிற்சி, யோகா, அறிவின் பயன்பாட்டைத் தூண்டும் நடவடிக்கைகள், சுற்றுலாக்கள் என முதியோரின் மனமகிழ்வுக்கு புதிய நிலையத்தில் பல்வேறு அம்சங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

முதுமை மறதி நோயால் தனிமை உணர்வு அதிகரிப்பதாகவும், அதனைக் குறைப்பதற்கான வழிகளை நிலையம் செயல்படுத்தும் என்றும் சன்லவ் இல்லத்தின் திட்ட நிர்வாகி சிட்டி ஆயிஷா ஓமார் தெரிவித்தார்.

பிறருடன் பேசி உறவாடும் வாய்ப்பை முதியவர்கள் இங்கே பெறலாம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்