தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$9 மில்லியனுக்கு மேற்பட்ட மோசடிகள்; காவல்துறை வலையில் சிக்கிய 309 பேர்

2 mins read
e2e27d0b-2f4e-4cf1-a1cc-e17ca59aaf8e
214 ஆண்கள், 95 பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நடந்துள்ள ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான மோசடி விவகாரங்கள் தொடர்பில் மொத்தம் 309 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை வலையில் சிக்கியிருக்கும் அவர்களில் 214 பேர் ஆண்கள், 95 பேர் பெண்கள். இவர்களுக்கு 1,600க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் பங்கு இருக்கும் என்று காவல்துறை நம்புகிறது.

ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்குவது உள்ளிட்ட காரியங்களுக்காக சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவதாகவும் முதலீட்டு வாய்ப்பு, வேலை வாய்ப்பு, இணையக் காதல் போன்ற மோசடிக்காரர்கள் விரித்த வலையில் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் ஏழு காவல்துறை நிலையங்கள் ஏப்ரலில் மேற்கொண்ட இரு வாரச் சோதனைக்குப் பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏமாற்றுக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை அல்லது $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் சட்டவிரோமாக கட்டணச் சேவை வழங்கும் நிறுவனத்தை நடத்துவோருக்கு $125,000 வரையிலான அபராதம், சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையே தங்களுடைய வங்கிக் கணக்கு அல்லது கைப்பேசியைப் பயன்படுத்த மற்றவர்களை அனுமதிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு காவல்துறை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோசடி பற்றிய விவரங்கள் www.scamalert.sg எனும் இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

1800-722-6688 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்