தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறை கரிமத் தொழில்நுட்பம்: புதிய $60 மி. ஆய்வுக்கூடம்

1 mins read
b7202d91-5eff-489f-ab43-fc83c2df0a0c
‘தி கார்ப்பரேட் லேப்’ என்று அழைக்கப்படும் புதிய ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழா நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (இடமிருந்து இரண்டாவது) கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

குறைவான கரிமத் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் அதை மேம்படுத்தவும் $60 மில்லியன் செலவில் புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

இதற்கு உதவும் வகையில் ஆய்வுக்கூடம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூடத்துக்கு ‘தி கார்ப்பரேட் லேப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஏ-ஸ்டார் அமைப்பு, எக்ஸோன்மோபில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

கரியமில வாயு வளிமண்டலத்திற்குள் செல்லாதிருக்கவும் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்யவும் புதிய ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகள் நடத்தப்படும்.

ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழா நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 26ஆம் தேதியன்று நடைபெற்றது.

அதில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார்.

அதிக கரிம வெளியேற்றத்துக்குக் காரணமான துறைகளை உருமாற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.

உள்ளூர் எரிசக்தி மற்றும் ரசாயனத் துறைகளை திரு ஹெங் உதாரணம் காட்டினார்.

இத்துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஜூரோங் தீவில் இயங்குவதைத் திரு ஹெங் சுட்டினார்.

அவ்விடத்தில் 2050ஆம் ஆண்டுக்குள் நீடித்த நிலைத்தன்மை உள்ள பொருள்களின் உற்பத்தியை நான்கு மடங்கு உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.

அதற்கு முன்பு, ஜூரோங் தீவில் ஒவ்வோர் ஆண்டும் கரிம அளவை ஆறு மில்லியன் டன்னுக்கும் அதிகம் குறைப்பதே இலக்கு என்று திரு ஹெங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்