கடைசி ஓய்வுத்தள சந்திப்பில் பிரதமர் லீ, அதிபர் ஜோக்கோவி

1 mins read
28c74cc0-5368-4b28-a105-3a6cef59cb54
2023ல் 42வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது பிரதமர் லீயும் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோவும் சந்தித்தனர். - கோப்புப் படம்: ஊடகம்

பதவி விலகும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி அந்நாட்டில் மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் நகரில் பிரதமர் லீயை சந்திக்க உள்ளார்.

அது இருநாட்டுத் தலைவர்களின் கடைசி ஓய்வுத்தள சந்திப்பாக விளங்கும் என்று தெரியவந்துள்ளது. சிங்கப்பூர், இந்தோனீசியத் தலைவர்களின் இந்த ஓய்வுத்தள சந்திப்புக்கு பதவி விலகும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி ஏப்ரல் 29ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் இது இருநாட்டுத் தலைவர்களின் ஏழாவதும் இறுதியானதுமான ஓய்வுத்தள சந்திப்பாக விளங்கும் என்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இந்த ஓய்வுத்தள சந்திப்பில் தாங்கள் பதவி வகித்த காலத்தில் இருநாட்டு உறவுகளில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்தை பிரதமர் லீயும் அதிபர் ஜோக்கோவியும் நினைவுகூர்வர் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கை விளக்கமளித்தது.

இதில் வான்வெளி நிர்வாகம், தற்காப்பு ஒத்துழைப்பு, குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது போன்றவை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் கையெழுத்தாகி பின்னர் இவ்வாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்ததும் அடங்கும்.

ஓய்வுத்தள சந்திப்பில் இருநாட்டுத் தலைவர்களும் தற்காப்பு, மின்னிலக்க பொருளியல், நீடித்த நிலைத்தன்மை, மனிதவள மேம்பாடு தொடர்பான ஒப்பந்தங்களையும் உறுதி செய்வர் என்று பிரதமர் அலுவலக அறிக்கை விளக்கியது.

குறிப்புச் சொற்கள்