ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் புதிய ஆதரவுத் திட்டம்

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் புதிய ஆதரவுத் திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Apr 2024 - 10:47 am

2 mins read

ஆட்குறைப்பு செய்யப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் புதிய ஆதரவுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் இந்த ஆண்டிறுதிக்குள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தமது தொழிலாளர் தினச் செய்தியில் ஏப்ரல் 27ஆம் தேதியன்று தெரிவித்தார்.

“பொருளியலில் மாற்றங்கள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இதன் காரணமாக மேலும் பல ஊழியர்கள் எதிர்பாராத விதமாக ஆட்குறைப்பு செய்யப்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே, தவறு ஏதும் செய்யாமல் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க விடுக்கப்பட்டுள்ள அழைப்புகளை ஏற்று அதன்படி செயல்பட்டு வருகிறோம்,” என்று திரு டான் கூறினார்.

மறு வேலை நியமன ஆதரவுத் திட்டம் குறித்து 2023ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

மீண்டும் வேலையில் சேர, ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இத்திட்டம் உதவும்.

2023ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணியில் பேசிய பிரதமர் லீ, தனிநபர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த அரசாங்கம் அவர்களுக்கு தற்காலிக நிதி ஆதரவு வழங்கும் என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் முன்பு செய்த வேலையைவிட சிறந்த, நீண்டகால பணியில் அவர்கள் சேரலாம் என்றார் அவர்.

இதற்கிடையே, அமைச்சர் டானின் தொழிலாளர் தினச் செய்தி மனிதவள அமைச்சின் மூன்று முக்கிய முன்னுரிமைகளை மேற்கோள் காட்டியது.

சிங்கப்பூர் ஊழியரணியின் வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டம் மேம்படுத்தப்படும்.

இத்திட்டத்தின்கீழ் சம்பள வரம்பும் வேலை அனுபவப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கான மாதாந்திரப் பயிற்சிப் படித்தொகையும் உயர்த்தப்படும்.

வெளிநாட்டு வேலைச் சந்தை பங்கேற்பத் திட்டமும் தொடங்கப்படும். அதன்கீழ், வெளிநாடுகளில் வேலை செய்து அனுபவம் பெற தங்கள் ஊழியர்களை அனுப்பி வைக்க நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.

நியாயமான, திறன் மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வேலையிட அணுகுமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாக டாக்டர் டான் உறுதி அளித்தார்.

இதுகுறித்து முத்தரப்புப் பங்காளித்துவத்துடன் இணைந்து வேலையிட அணுகுமுறைகளை வடிவமைக்க மனிதவள அமைச்சு தொடர்ந்து செயல்படும் என்றும் இதற்காக புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்