சாய்வு இருக்கைகள் இயங்காததால் தம்பதியருக்கு இழப்பீடு செலுத்த எஸ்ஐஏக்கு உத்தரவு

2 mins read
4ddb22d2-5372-4020-b2eb-c6fba53f9c78
இருக்கைகளைத் தானியங்கி முறையில் சாய்க்க முடியாத நிலை ஏற்பட்டபோதிலும் பயணிகளின் கைகளால் இருக்கைகளைச் சாய்க்கும் முறை இயங்கியது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹைதராபாத்: விமானத்தின் சாய்வு இருக்கைகள் இயங்காததால் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ரூ. 200,000 (S$3,300) இழப்பீடு செலுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியன்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலக் காவல்துறையின் உயர் அதிகாரியான திரு ரவி குப்தா தமது மனைவியுடன் ஹைதராபாத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் வர்த்தக வகுப்பில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

ஆனால் அவர்களது சாய்வு இருக்கைகள் தானியங்கி முறையில் இயங்கவில்லை.

இது தமக்கும் தமது மனைவிக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக திரு குப்தா தெரிவித்தார்.

எனவே, அந்த 14 மணிநேரப் பயணத்தின்போது தம்மால் தூங்க முடியவில்லை என்றார் அவர்.

இரண்டு பயணச் சீட்டுகளுக்கும் மொத்தம் ரூ. 133,500 செலுத்தியதாக அவர் கூறினார்.

இத்தகவலை இந்தியாவின் டெக்கன் குரோனிக்கல் நாளிதழ் தெரிவித்தது.

இதுகுறித்து அவர் ஹைதராபாத்தில் உள்ள பயனீட்டாளர் ஆணையத்தில் புகார் செய்தார்.

பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு 97,500 ரூபாயுடன் புகார் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 விழுக்காடு வட்டியுடன் கூடுதல் தொகையையும் கொடுக்கவேண்டும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஆணையம் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு மனதளவில் வேதனை, அசௌகரியத்தை ஏற்படுத்தியதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவர்களுக்கு ரூ. 100,000 இழப்பீடு தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அத்துடன், புகார் அளிப்பதற்காக ஏற்பட்ட ரூ. 10,000 செலவையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தம்பதியருக்குத் தலா 10,000 கிறிஸ்ஃபிளையர் மைல்ஸ் வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன்வந்தது. ஆனால் அவற்றை ஏற்க தம்பதியர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், ஆணையத்தின் முடிவு பற்றி தனக்குத் தெரியும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

“திரு, திருமதி குப்தாவின் இருக்கைகளைத் தானியங்கி முறையில் சாய்க்க முடியாத நிலை ஏற்பட்டது உண்மை. ஆனால் பயணிகளின் கைகளால் இருக்கைகளை சாய்க்கும் முறை இயங்கியது. இயந்திரக் கோளாறு காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

ஹைதராபாத் பயனீட்டாளர் ஆணையம் உத்தரவிட்ட ஈழப்பீட்டுத் தொகை செலுத்தப்படுமா அல்லது அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமா என்பது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்