நடமாடும் மளிகைப் பொருள் வாகனம் மூலம் 7,200 குடும்பங்களுக்கு உதவி

நடமாடும் மளிகைப் பொருள் வாகனம் மூலம் 7,200 குடும்பங்களுக்கு உதவி

2 mins read
99bee83c-063e-4cd3-b49a-c5f244003bbb
சனிக்கிழமை (ஏப்ரல் 27) அன்று சுவா சூ காங் சென்ட்ரல் புளோக் 236ல் நடமாடும் மளிகைப் பொருள்கள் திட்டத்தை தொடங்கி வைத்தபோது அதில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங்கும் அத்தியாவசிய பொருள்களை தொண்டூழியர்களின் உதவியுடன் வழங்கினர்.  - படம்: சாவ்பாவ்

பொருள்களை ஏந்திச் செல்லக்கூடிய மடக்கு சக்கர வண்டியுடன் சுரட்மின் அலி என்ற சுவா சூ காங் குடியிருப்பாளர் ரொட்டி, சமையல் எண்ணெய், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன் உணவு ஆகியவற்றைப் பெறக் கிளம்பினார்.

அவர் அப்பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 100 பேருடன் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை நடமாடும் சரக்கு வாகனத்திலிருந்து பெற்றுக்கொள்ளச் சென்றார்.

நடமாடும் மளிகைப் பொருள்கள் என்ற பெயருடன் செயல்படும் அந்த வாகனம் தென்மேற்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்ட புதிய திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

அந்த வாகனம் சுவா சூ காங் வட்டாரத்தில் புளோக் 236ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் 19 வகையான மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து எளிதில் பாதிக்கப்படும் நிலையில் இருந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் $40 பெறுமானமுள்ள பொருள்களை தேர்ந்து எடுத்துச் சென்றன.

இந்தப் பொருள்களை எல்லாம் பொட்டலமிட்டுக் கொடுத்தனர் ஹுவா சோங் கல்வி நிலைய, லியன் ஹுவா தொடக்கப் பள்ளி மாணவர்கள்.

தென்மேற்கு வட்டாரத்தில் உள்ள 18 பிரிவுகளைச் சுற்றி 7,200 எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவ பொருள்களை ஏந்திச் செல்லும் பல வாகனங்களில் ஒன்றுதான் புளோக் 236ல் நின்று குடியிருப்பாளர்களுக்குப் பொருள்கள் தந்து உதவியது.

இந்த வாகனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட $300,000 பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள், குடும்பங்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள்களை வழங்கும்.

இது குடும்பங்களின் அன்றாடச் செலவினத்துக்கு உதவும் வகையிலும் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்கும் இலக்குடன் அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த விநியோக நடவடிக்கைகள் மாதந்தோறும் மூன்று முறை நடைபெறும். இது தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், நன்கொடை அமைப்பான ஹாவ் ரென் ஹாவ் ஷி ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவ முறையின்கீழ் நடத்தப்படுகிறது.

“இது எவ்வளவு தூரம் எனது செலவை மிச்சப்படுத்தும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் தருவதை நான் ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் எனக்கு எந்த ஊதியமும் இல்லை,” என்று ஓய்வுபெற்ற திரு சுரட்மின் கூறுகிறார். இவரது மனைவியும் ஓய்வுபெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் திருமணமாகி சொந்தப் பிள்ளைகளுடன் வாழ்கின்றனர். அவர்களைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை,” என்று கூறுகிறார் மத்திய சேம நிதி சேமிப்பில் பணம் பெற்று வாழும் திரு சுரட்மின்.

குறிப்புச் சொற்கள்