வட்டப்பாதை ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

வட்டப்பாதை ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

1 mins read
287ffe0b-3d97-4318-9215-3c8ea17c41e4
ரயில் சேவை இடையூறு காரணமாக பயணிகள் பலர் பாதிக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வட்டப்பாதையில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காலை 8.11 மணி அளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அது பதிவிட்டது.

ரயில் சேவை தடைப்பட்டதை முன்னிட்டு, பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இணைப்புப் பேருந்துகள் காலை 8.15 மணியிலிருந்து இயங்காது என்று அது தெரிவித்தது.

ரயில் கோளாறு காரணமாக ஏப்ரல் 29ஆம் தேதி காலை, வட்டப்பாதையில் சேவை இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாகப் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

சேவை இடையூறு குறித்து காலை 6.09 மணி அளவில் எஸ்எம்ஆர்டி அதன் ஃபேஸ்புக்கில் தகவல் தெரிவித்தது.

ஹாலந்து வில்லேஜ் நிலையத்துக்கும் பாசிர் பாஞ்சாங் நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பயண நேரம் அரை மணி நேரம் கூடுதலாகும் என்றும் அது பயணிகளுக்குத் தெரிவித்தது.

ரயில் கோளாறு காரணமாக பீஷான் நிலையத்துக்கும் ஒன்நார்த் நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக காலை 6.28 மணிக்கு எஸ்எம்ஆர்டி கூறியது.

அதன் பிறகு காலை 6.50 மணி அளவில் பாய லேபார் நிலையத்துக்கும் ஒன்நார்த் நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

சிராங்கூன், பீஷான், கெல்டிகாட், பூமலை, புவன விஸ்தா ஆகிய நிலையங்களிலிருந்து வேறு ரயில் பாதைகளைப் பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அது ஆலோசனை வழங்கியது.

பின்னர் ரயில் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் வட்டப்பாதையில் ரயில் சேவை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புவதாகவும் காலை 7.40 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்