சிங்கப்பூரர்களை ஈர்க்கும் சிற்றுருவக் கலை

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் சிற்றுருவக் கலை

2 mins read
9ce6908a-b5fe-48cc-9dfc-a8306211f425
சிற்றுருவக் கலை படைப்புகளை கலைஞர்கள் பலர், சமூக ஊடகங்கள் வழி பதிவிட்டு வருகின்றனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சிற்றுருவக் கலைக்கு என ஒரு தனி இடம் உருவாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதில் நாட்டம் செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தங்களது கைவண்ணத்தில் உருவான சிற்றுருவக் கலைப் படைப்புகளை கலைஞர்கள் பலர், சமூக ஊடகங்கள் வழி பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு மேலும் பலர் அக்கலையை பயிலத் தொடங்கியுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஆண்டனி ஓங் 2021ஆம் ஆண்டு யூடியூப்பில் சிற்றுருவக் கலை தொடர்பான காணொளிகளைப் பார்க்கத் தொடங்கினார்.

ஓவியம் வரைதலில் போதிய அனுபவம் இல்லாத ஓங், சிற்றுருவக் கலை மீது கொண்ட ஆசையால் உடனடியாக கடைக்குச் சென்று வேண்டிய பொருள்களை வாங்கி காணொளியில் செய்வது போலவே தாமும் சிற்றுருவங்களை செய்யத் தொடங்கினார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அக்கலையில் மூழ்கிய 33 வயது ஓங் தற்போது மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

அண்மையில் அவர் ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்தை வடிவமைத்தார். அவரது படைப்பு சிங்கப்பூர் வாசிகள் இடையே மிக பிரபலமானது.

ரயில் நிலையத்தை வடிவமைக்க கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எடுத்ததாகக் கூறினார் ஓங். விளையாட்டாகத் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது தன்னை ஒரு கலைஞராக மாற்றியதை எண்ணி மகிழ்ச்சி தெரிவித்தார் ஓங். சிற்றுருவக் கலைக்காக மாதம் 100 வெள்ளி செலவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஓங்கின் படைப்புகளைக் கண்ட இணையவாசிகள் அவரிடம் சிற்றுருவக் கலைகளை வாங்கவும் தொடங்கினர். இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஓங் கிட்டத்தட்ட 400 படைப்புகளை விற்றுள்ளார்.

ஓங்கைப் போலவே 43 வயது செலிஸ்ட் சோவும் சிற்றுருவக் கலையில் ஆர்வம் கொண்டவர்.

உணவு வகைகளை சிற்றுருவமாகப் படைப்பது இவரது சிறப்பு. 2013ஆம் ஆண்டு இக்கலையால் ஈர்க்கப்பட்ட சோ, தனக்கு கிடைக்கும் நேரங்களில் படைப்புகளை செய்வதாகத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் வழி தமக்கு அதிக ஆதரவும் பாரட்டுகளும் கிடைப்பதாக சோ கூறினார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் மின்னல் படை வீரராக இருந்த 58 வயது வில்ஃபிரட் சியாவும் சிற்றுருவக் கலையில் முழு ஈடுபாட்டுடன் உள்ளார். சிறு வயதில் இருந்தே சிற்றுருவக் கலை மீது ஆர்வம் இருந்ததாகவும் தற்போது ஓய்வு நேரத்தில் சிறுவயதில் செய்யாமல் விட்ட இந்தக் கலையை இப்போது தொடர்வதாகத் தெரிவித்தார்.

முடிந்த வரை மறுபயனீட்டு பொருள்களை பயன்படுத்தி தாம் சிற்றுருவப் படைப்புகளை செய்வதாக சியா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்