3 பில்லியன் வெள்ளி மோசடி வழக்கு; $777,220 வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 4வது நபர்

2 mins read
8a6cddf4-4a59-4527-a2af-b7afaf25ab3b
நான்காவது நபரான சு பாவ்லின்னுக்கு 14 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - சித்திரிப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகப்பெரிய மோசடி வழக்கில் நான்காவது நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களிலிருந்து கிடைத்த பணத்தில் ஆடம்பரக் கார் வாங்கியதையும் $777,220 ரொக்கம் வைத்திருந்ததையும் ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடியில் தொடர்புடைய பத்து வெளிநாட்டு சந்தேக நபர்களில் கம்போடியரான சு பாவ்லின்னும், 42, ஒருவர்.

இவர், தம்மீது சுமத்தப்பட்ட 13 குற்றச்சாட்டுகளில் மூன்றை ஒப்புக்கொண்டார்.

ஸின்பாவ் இன்வெஸ்ட்மெண்ட் ஹோல்டிங்சின் வருமானம், நிகர லாபத்தைத் தெரிவிப்பது தொடர்பில் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் தவறாகப் பிரதிநிதிக்க வாங் ஜுன்ஜியேயிடம் கூட்டாகச் சதி செய்தது ஒரு குற்றமாகும்.

மற்றொரு குற்றம் $777,220.50 ரொக்கமும் காரும் வைத்திருந்தது.

குற்றச்செயல்களிலிருந்து கிடைத்த பணத்தில் வெள்ளைநிற டொயோட்டா அல்ஃபார்ட் காரை $332,282.26க்கு அவர் வாங்கியிருந்தார்.

எஞ்சிய ஒன்பது குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

2023 ஆகஸ்ட் மாதத்தில் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றிய மோசடியின் தொடர்பில் தீவு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அதில் சுவும் இதர ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மூன்று பில்லியன் வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது முடக்கப்பட்டன.

உலக அளவில் இந்த விவகாரம் பெரிய மோசடியாகப் பேசப்பட்டது.

ஏப்ரல் மாதத்திலிருந்து வாங் பாவ்சென், சு ஹாய்ஜின், சு வென்சியாங் ஆகிய மூன்று ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு 13 முதல் 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சு பாவ்லின் குற்றத்தை ஒப்புக்கொண்ட நான்காவது நபர்.

திங்கட்கிழமை (ஏப்ரல் 29) அன்று சு பாவ்லின்னுக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்