பிரதமர் லீ: அனைத்துலக அரங்கில்தனித்துவம் பெற்ற சிங்கப்பூர்

2 mins read
37ff8aa9-ddcd-4c65-95ea-37c4c7883ef0
இருபது ஆண்டுகளில் சிங்கப்பூர் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த இருபது ஆண்டுகளில் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. பல விவகாரங்களில் பங்கேற்று உலக வரைபடத்தில் தனது இடத்தைப் பாதுகாத்து கொண்டுள்ளது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின் ஒரு பகுதியாக மேற்கு ஜாவாவில் உள்ள போகோரில் திங்கட்கிழமை அன்று (ஏப்ரல் 29) சிங்கப்பூர் ஊடகங்களிடம் அவர் பேசினார்.

இது, பிரதமர் என்ற முறையில் திரு லீயின் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் அனைத்துலகத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் சிங்கப்பூரை பிரதிநிதித்தது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அப்போது, உலக விவகாரங்கள் தொடர்பான விவாதங்களில் சிங்கப்பூரின் பங்களிப்பு குறித்து பிரதமர் லீ பேசினார்.

“இருபது ஆண்டுகளாக அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளது. பல உலகக் கருத்தரங்குகளில் பங்களிப்பதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளை எதிர்கொள்வதிலும் சிங்கப்பூரின் பங்கு உள்ளது. அது மட்டுமல்லாமல் டிரான்ஸ் பசிபிக் விரிவான பங்காளித்துவ உடன்பாடு, விரிவான வட்டார பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு போன்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும் சிங்கப்பூரின் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான வருடாந்திர பாரம்பரிய ஓய்வுத் தளச் சந்திப்பு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்தச் சந்திப்பு பிரதமர் லீக்கு மட்டுமல்லாாமல் இந்தோசீனிய அதிபராக ஜோக்கோ விடோடோவுக்கும் கடைசியாகும்.

வரும் மே 15ஆம் தேதி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், பிரதமர் லீயிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். இதே போல இந்தோனீசியாவில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய தற்காப்பு அமைச்சரான பிரபோவோ சுபியாந்தோ, அக்டோபரில் விடோடோவிடமிருந்து அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்.

பிரதமர் பொறுப்பை ஒப்படைத்த பிறகு வெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வீர்களா என்று கேட்டதற்கு தற்போதுள்ள அளவுக்கு இருக்காது, தேவை ஏற்பட்டால் வெளிநாட்டுப் பயணங்களில் தன்னால் ஆன வகையில் சிறப்பாக செய்வேன் என்று திரு லீ குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற முறையில் இந்தோனீசியா தனது கடைசி வெளிநாட்டுப் பயணமாக இருந்ததில் திரு லீ மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் உள்ள போகோரில் (இடமிருந்து) பிரதமர் லீ சியன் லூங், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ.
இந்தோனீசியாவில் உள்ள போகோரில் (இடமிருந்து) பிரதமர் லீ சியன் லூங், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்