வேலை இழந்த ஊழியர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்புக்கு வலியுறுத்து

வேலை இழந்த ஊழியர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்புக்கு வலியுறுத்து

2 mins read
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் மே தினச் செய்தி
e25750a4-53de-44a2-b040-c1834611723d
பெரிய, சிறிய நிறுவனங்கள் அதிக அளவு செலவுகளை எதிர்நோக்குவதாகப் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமது மே தினச் செய்தியில், வேலை இழந்த ஊழியர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற தமது கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வேலை இழந்த ஊழியர்களைச் சிறந்த வகையில் பாதுகாக்கவும் அவர்களது நலன்களுக்காகவும் காப்புறுதி முக்கியம் என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பெரிய, சிறிய நிறுவனங்கள் அதிகச் செலவுகளை எதிர்நோக்குவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டில் நிறுவனங்களின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ள நிலையில் ‘முழு வேலை வாய்ப்பு இருந்தாலும் சிங்கப்பூர் ஊழியர்கள் நம்பிக்கையற்று இருக்கலாம்’ என்று எதிர்க்கட்சித் தலைவருமான திரு சிங் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கைகள் வேலை இழப்புகளுக்கும் சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு சில நிறுவனங்கள் இவ்வட்டாரத்தில் உள்ள இதர நாடுகளுக்கு இடம் மாறவும் வழிவகுத்துள்ளன

“பெரிய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இங்குள்ள வர்த்தகச் செலவுகளால் சிங்கப்பூரில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிக அழுத்தத்தை அனுபவிக்க நேரிடும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சென்ற 2023 செப்டம்பரில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், வேலை இழப்பின் பலன்கள் காப்புறுதி வடிவில் இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

அதற்குப் பதிலாகப் பொருத்தமான வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

வேலை இழந்த ஊழியர்கள் அவர்களது உடனடிச் சிரமங்களுக்கு உதவ அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின்கீழ் இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.

ஏப்ரல் 27ஆம் தேதி, மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் தமது மே தினச் செய்தியில் வேலை இழந்து வேலை தேடுவோருக்கு இவ்வாண்டின் பிற்பகுதியில் புதிய ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்