இங் சீ மெங்: லாரன்ஸ் வோங்கிற்குத் தொழிலாளர் இயக்கத்தின் முழு ஆதரவு உள்ளது

2 mins read
8aa952f8-044a-413a-a423-482c5c86653e
என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குத் தொழிலாளர் இயக்கத்தின் முழு ஆதரவு இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பேசிய திரு இங், பிரதமர் பதவியிலிருந்து விலக இருக்கும் திரு லீ சியன் லூங்கிற்குப் புகழாரம் சூட்டினார்.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக திரு லாரன்ஸ் வோங் மே 15ல் பதவி ஏற்க இருக்கிறார்.

திரு வோங், ஊழியர்களுக்காக குரல் கொடுப்பவர் என்று திரு இங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஊழியர்களின் நலனுக்காகவும் நாட்டின் செழுமைக்காகவும் திரு வோங்குடன் தொடர்ந்து இணைந்து செயல்பட தொழிலாளர் இயக்கம் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.

குறைந்த வருமானம் ஈட்டும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்கள் மீது திரு வோங் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றார் திரு இங்.

2023ஆம் ஆண்டில் ‘எவரிவொர்க்கர்மேட்டர்ஸ்’ மாநாட்டின் நிறைவு விழாவின்போது, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அரசாங்கத்தின் மிக முக்கியமான பங்காளி என்று திரு லாரன்ஸ் வோங் தெரிவித்ததை திரு இங் சுட்டினார்.

இதைக் கேட்டு தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் மனம் நெகிழ்ந்ததாக திரு இங் கூறினார்,

“சிங்கப்பூருக்கே உரிய முத்தரப்புப் பங்காளித்துவம் திரு வோங்கின் தலைமையிலும் தொடரும் என்பதை அவர் தெரிவித்த கருத்துகள் மூலம் தெளிவாகத் தெரிந்தது. திரு வோங்கின் தலைமையின்கீழ் செயல்பட ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்,” என்று திரு இங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்