மோசடிக்கு ஆளான 70 வயது ஆடவர்; $380,000ஐ மீட்ட சிங்கப்பூர், ஹாங்காங் காவல்துறை

2 mins read
98dc6775-5d56-4219-8302-2b6bd5e64bee
2023ஆம் ஆண்டு 46,563 மோசடிச் சம்பவங்கள் குறித்த புகார்கள் வந்தன. இதுபோன்ற மோசடிகளை 2016ஆம் ஆண்டு காவல்துறை விசாரிக்க தொடங்கியதிலிருந்து இது ஆக அதிகமாகப் பதிவான மோசடிச் சம்பவங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காவல்துறை, வங்கிகள், ஹாங்காங் காவல்துறையுடன் இணைந்து மோசடிக்கு ஆளான 70 வயது ஆடவரின் $370,000க்கும் மேற்பட்ட தொகையை மீட்டுள்ளன.

ஏப்ரல் 18ஆம் தேதி மோசடிக்கு ஆளான நபரின் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகம் ஏற்படும்படியான முறையில் சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கியிலிருந்து ஹாங்காங் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு கிட்டத்தட்ட $180,000 மாற்றப்பட்டதை டிபிஎஸ் வங்கி கண்டறிந்தது.

இதை சிங்கப்பூர் காவல் துறை மே 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.

டிபிஎஸ் வங்கி உடனடியாக மேலும் பணப் பரிமாற்றம் ஏற்படாமல் தடுத்தது. அத்துடன், காவல்துறையின் மோசடிக்கு எதிரான பிரிவிடம் தகவல் தெரிவித்தது.

டிபிஎஸ் வங்கி அளித்த தகவலின் அடிப்படையில் சிங்கப்பூர் காவல்துறை ஹாங்காங் காவல்துறையின் மோசடிகளை விசாரிக்கும் ‘ஆன்டி-டிசெப்ஷன் கோஆர்டினேஷன் சென்டர்’ பிரிவுக்கு தகவல் அளித்தது.

மோசடிக்கு ஆளானவரை தொடர்பு கொள்ள முடியாததால் காவல்துறை அங் மோ கியோ தெற்கு வட்டார அக்கம்பக்க காவல்துறை அதிகாரிகளை அவரை தொடர்பு கொள்ளுமாறு பணித்தது. ஆனால், மோசடிக்கு ஆளானவர் வீட்டில் இல்லை.

இதன் பின்னர் காவல்துறையினர் அவரின் குடும்ப நண்பரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அந்த நண்பர் மோசடிக்கு ஆளானவரின் யுஓபி வங்கிக் கணக்கிலிருந்து $240,000 காணாமல் என்று தெரிவித்தார்.

காவல்துறையினர் உடனடியாக மோசடிக்குப் பணத்தை இழந்தவரின் வங்கிக் கணக்கை முடக்கி அவர் கணக்கிலிருந்து ஹாங்காங் வங்கிக்குச் சென்றப் பணத்தை அடையாளம் கண்டனர்.

அதேவேளையில், சிங்கப்பூர், ஹாங்காங் காவல்துறையின் மோசடிக்கு எதிரான பிரிவுகள் இணைந்து செயல்பட்டு மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டப் பணத்தை முழுவதுமாக திரும்பப் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்