தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை: காவல்துறை

2 mins read
45b85e8a-0dcd-4440-b72b-5dcd74900ff1
ஹோங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் யாரும் அதற்கான அனுமதியைப் பெற தேசிய பூங்கா வாரியத்துக்கு மனு செய்ய வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்று சிங்கப்பூர் காவல்துறையும் தேசிய பூங்காக் கழகமும் பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளன.

இரு அமைப்புகளும் ஏப்ரல் 30ஆம் தேதி இது தொடர்பாக கூட்டறிக்கையை வெளியிட்டன.

பேச்சாளர் சதுக்கத்தில் போர் தொடர்பாக பொது நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல் துறையிடம் தகுந்த அனுமதியை ஏற்பாட்டாளர் பெற வேண்டும் என்றும் அவை சுட்டிக்காட்டின.

போர் தொடர்பாக பேச்சாளர் சதுக்கத்தில் சில நடவடிக்கைகள் ஏற்பாடு செய்ய திட்டமிடுவது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததால் அறிக்கை வெளியிட்டதாக அமைப்புகள் கூறின.

சிங்கப்பூரில் போர் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தினால் பொதுப் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று காவல்துறை கருதுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்தால் அது சிங்கப்பூரின் அமைதிக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் தீங்கை ஏற்படுத்தலாம், மேலும் சமூகங்களுக்கு இடையில் வேறுபாட்டை உருவாக்கும் என்றும் காவல்துறை கூறியது.

பேச்சாளர் சதுக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய அல்லது ஏற்பாடு செய்ய உதவ விரும்பும் சிங்கப்பூர் குடிமக்களாக இல்லாதவரும் வெளி அமைப்புகளும் காவல்துறை அனுமதியைப் பெற வேண்டும்.

ஹோங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் யாரும் அதற்கான அனுமதியைப் பெற தேசிய பூங்கா வாரியத்துக்கு மனு செய்ய வேண்டும் என்று அந்த வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

அந்த இடத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய அல்லது ஏற்பாடு செய்ய உதவ விரும்பும் சிங்கப்பூர் குடிமக்களாக இல்லாதவரும் வெளி அமைப்புகளும் காவல்துறை அனுமதியைப் பெற வேண்டும்.

பேச்சாளர் சதுக்கத்தில், பொதுக் கூட்டத்தில் பேச வேண்டுமானால் சிங்கப்பூரர்களைத் தவிர மற்றவர்கள் காவல்துறை அனுமதியையும் பெற வேண்டும்.

குறிப்புச் சொற்கள்