தம் மோட்டார்சைக்கிளின் டயர்களில் இருந்து எளிதில் காற்று வெளியானதைக் கண்டறிந்த ஆடவர் ஒருவர், மோட்டார்சைக்கிள் பாகங்களைத் திருட பிள்ளைகளின் உதவியை நாடினார்.
உட்லண்ட்சில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் ஒரே ரக மோட்டார்சைக்கிள்களில் இருந்து டயர்களை திருட ஹஸ்லி ஹசன், 54, திட்டம் தீட்டினார்.
ஏப்ரல் 30ஆம் தேதி, மாவட்ட நீதிபதி வோங் லி டெயின் ஹஸ்லியின் நடத்தைக்காக கடிந்துகொண்டார். ஹஸ்லி தம் பிள்ளைகளுக்கு ஒரு மோசமான முன்மாதிரியாக நடந்துகொண்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
19 வயதான அவருடைய மகனும் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“உங்கள் மகன் இப்போது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். உங்கள் மகளும் இறுதியில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவாரா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று நீதிபதி வோங் கூறினார்.
மோட்டார் வாகனத்தைத் திருடிய ஒரு குற்றச்சாட்டையும் மூன்று திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட ஹஸ்லிக்கு 18 வாரச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
விடுதலையானதும் 12 மாதங்களுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருப்பதிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.