பிரதமர் லீ சியன் லூங் தாம் மேற்கொள்ளும் எந்தக் காரியத்திலும் சிங்கப்பூரர்களை மனதில் வைத்தே செயல்படுவார். புத்திக்கூர்மை, நம்பகத்தன்மை, பணி நெறிமுறைகள் போன்றவற்றின் மூலம் ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திரு லீ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“அவரது தலைமைத்துவம் சிங்கப்பூருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவருடன் பணிபுரியாதவர்களுக்குத் தெரியாது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்திருக்கும் இமாலய வளர்ச்சியே அதற்குச் சான்று பகரும்,” என்று திரு சண்முகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் பணவீக்கத்தைக் கணக்கிடாத மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்கு உயர்ந்திருப்பது, பொருளியல் மறுசீரமைப்பு, பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவை மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூரை தனித்துக் காட்டுகிறது.
“நாட்டின் மேம்பட்ட வளர்ச்சிக்கு இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும். உயரும் வர்த்தகச் செலவுகள், சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல், முதலீடுகளை ஈர்க்கும் சிறந்த நாடாக சிங்கப்பூரைத் தொடர்ந்து வழிநடத்துதல் முதலியவை அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்திக்கக்கூடிய புதிய சவால்கள்,” என்றும் அமைச்சர் சண்முகம் கருத்துரைத்தார்.
பிரதமர் லீயின் உரை உற்சாகமளிக்கிறது
மே தினப் பேரணிக்குப் பிறகு தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங், “பிரதமர் லீ தனது உரையில், பொதுத் துறையில் சேவையாற்ற பல ஆண்டுகளுக்கு முன் அவர் எடுத்த முடிவால் மிகுந்த மனநிறைவடைவதாகவும் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்திருப்பதாகவும் கூறியது நெகிழ வைத்தது. அவரது கடப்பாடுமிக்க அளப்பரிய பணியும் சேவையும் வேலை செய்யும் அனைவருக்கும் ஓர் ஊக்கமாக விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை,” என்று கூறியிருந்தார்.
சிங்கப்பூரை சிறப்பானதாக ஆக்குவது எது?
எது சிங்கப்பூரை சிறப்பானதாக்குகிறது என்பதற்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கம் தந்துள்ளார்.
“தொழிற்சங்கங்கள், முதலாளிகள், அரசாங்கம் எனும் முத்தரப்புப் பங்காளித்துவ வெற்றியின் ரகசியம் என்னவென்றால், நாட்டின் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்து அவை செயல்படுவதே.
“மக்கள் செயல் கட்சிக்கும் தேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கும் இடையிலான பங்காளித்துவத்துக்கு நமது முன்னோர்கள் வலுவான அடித்தளம் அமைத்து விட்டார்கள். பிரதமர் லீ சியன் லூங்கின் தலைமைத்துவத்தின் கீழ், இந்தப் பங்காளித்துவம் பல ஆண்டுகளைக் கடந்து வளர்ந்துள்ளது, பலம் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வொரு சிங்கப்பூரரை தயார்ப்படுத்துவதற்கும் அவருக்கு அதிகாரமளிக்கவும் இந்த முத்தரப்புப் பங்காளித்துவத்தை நானும் எனது குழுவினரும் மேலும் வலுப்படுத்துவோம். இதனால், அனைவரும் தங்கள் கனவுகளை அடைந்து தங்கள் முழுத் திறனை வெளிக்கொணரலாம். வாருங்கள்.. ஒன்றிணைந்து செயல்பட்டு முன்னேறுவோம்,” என்று திரு வோங் தெரிவித்தார்.

