என்டியுசி உறுப்பினர் எண்ணிக்கை 30% கூடி அது 1.3 மில்லியனாக உள்ளது

2 mins read
95b76c18-c528-4e5f-a22a-ba3001fe2a24
என்டியுசி உறுப்பினர்களில் 45 விழுக்காட்டினர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் என்று தொழிலாளர் தலைவர் இங் சீ மெங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தனது உறுப்பினர் எண்ணிக்கையை கடந்த 3 ஆண்டுகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை (மே 1ஆம் தேதி) அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.

மே தினப் பேரணியில் என்டியுசி உறுப்பியம் குறித்த ஆகக் கடைசித் தகவல்களை திரு இங் அளித்தார். அதன்படி, சங்கத்தின் உறுப்பினர்களில் 45 விழுக்காட்டினர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் என்று அவர் தெரிவித்தார். இது தேசிய ரீதியிலான விகிதத்தை ஒத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் என்டியுசி அதன் உறுப்பினர் எண்ணிக்கையை 1.5 மில்லியனுக்கு கொண்டு செல்வது என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

“இன்றைக்கு, நமது ஊழியரணியில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் அதிகமாக உள்ளனர். இனி வரும் காலத்தில், நமது கல்வித் துறை உருவாகி வரும் நிலையைப் பார்த்தால், ஊழியரணியின் பெரும்பகுதியினர் இவர்களாகவே இருப்பர்,” என்று கூறினார். இந்தப் பிரிவினருக்கு இன்னும் அதிகமாக சேவையாற்றப் போவதாகவும் திரு இங் சொன்னார்.

வேலைச் சந்தையில் சிங்கப்பூரர்கள் சமமான வாய்ப்புகள் பெறும் வகையில் காம்பஸ் எனப்படும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஊழியர்கள் வேலையிடத்தில் நியாயமாக நடத்தப்படவும் அவர்களைப் பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்படும் என்றும் திரு இங் தெரிவித்தார். இவை ஒருபுறம் இருக்க, மனிதவள நடைமுறைகளை மேம்படுத்தவும் தொழிற்சங்க இயக்கம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக திரு இங் விளக்கினார்.

எம்பிளாய்மெண்ட் பாசுக்கு விண்ணப்பிப்போருக்கும் அவர்களுடைய வருங்கால முதலாளிகளுக்கும் காம்பஸ் எனப்படும் தகுதிப் புள்ளிகள் கொண்ட நடைமுறையை மனிதவள அமைச்சு வகுத்து அதன்படி எம்பிளாய்மெண்ட் பாஸ் வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்