தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய இஆர்பி கருவியை ஓட்டுநர் காலிருக்கும் பகுதியில் பொருத்தலாம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

2 mins read
05201434-cd8c-4b31-9f32-32a26991ac61
கருத்துசேகரிப்பின் அடிப்படையில் நிலப் போக்குவரத்து ஆணையம் இஆர்பி கருவிகளில் மாற்றங்கள் செய்துள்ளது. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

அடுத்த தலைமுறை புதிய இஆர்பி கருவி வாகனத்தில் ஓட்டுநர் ஒருவர் தனது காலிருக்கும் பகுதியில் பொருத்திக்கொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு வாகனத்தில் ஓட்டுநர் கால் வைத்திருக்கும் பகுதி அதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வாகன உரிமையாளர்கள் இந்த இஆர்பி கருவியை ஓட்டுநரின் காலிருக்கும் பகுதி அல்லது முன்னால் அமர்ந்திருக்கக்கூடிய பயணியின் காலிருக்கும் பகுதியில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியது. ஆனால், இது பாதுகாப்பு, தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளைப் பொறுத்தது என்று ஆணையம் விளக்கியது.

புதிய அடுத்த தலைமுறை இஆர்பி கருவிகள் இதுவரை 18,000 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணையம் மேற்கொண்ட கருத்துசேகரிப்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அது மேற்கூறப்பட்ட மேம்பாடுகளை அறிவித்துள்ளது.

வாகனங்களில் பொருத்தப்படும் இஆர்பி கருவிகளில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை, கருவியின் செயல்முறைப் பிரிவு, உணர்கருவி, தொடுதிரை வரைபடம்.

புதிய இஆர்பி கருவிகள் வாகன ஓட்டுநரின் பக்கவாட்டில் இருப்பது சிரமமான ஒன்று என்றும் அது பாதுகாப்பானதல்ல என்றும் எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஆணையம் இந்தக் கருவிகளை ஓட்டுநர் அல்லது முன்பயணியின் காலிருக்கும் பகுதியில் வைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இந்தக் கருவிகளின் தொடுதிரையில் ஒரு பொத்தான் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறியது. இதனால், இலவச கார்நிறுத்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் வாகன ஓட்டுநர்கள் தங்கள் கருவியில் உள்ள கட்டண அட்டைகளை செயலிழக்கச் செய்ய, காரை ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கட்டண அட்டையை நீக்காமல் இந்த பொத்தானை அழுத்தினால் போதுமானது.

குறிப்புச் சொற்கள்