இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு டிபிஎஸ்/பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு டிபிஎஸ்/பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின

2 mins read
ae2a9080-e2bc-417f-abe4-46b98da276a9
மாலை 5.40 மணியிலிருந்து, இணையத்திலும் செயலிகளிலும் வங்கிக் கணக்குகளுக்குள் நுழையவும் பேலா! சேவையைப் பயன்படுத்தவும் சிலர் சிரமப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிபிஎஸ்/பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவை பயனர்கள் சிலர், வியாழக்கிழமை (மே 2) அவ்வங்கியின் சேவைகளை இரண்டு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்த முடியாமல் சிரமம் எதிர்நோக்கினர்.

மாலை 5.40 மணியிலிருந்து, இணையத்திலும் செயலிகளிலும் வங்கிக் கணக்குகளுக்குள் நுழையவும் பேலா! சேவையைப் பயன்படுத்தவும் சிலர் சிரமப்பட்டனர்.

சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ இணையப்பக்கம், மாலை 6.10 மணியளவில் பயனர்களிடம் இருந்து 2,200க்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவுசெய்தது.

மாலை 6.54 மணிக்கு டிபிஎஸ் வங்கி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், டிபிஎஸ்/பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவைகளையும் டிபிஎஸ் பேலா! சேவையையும் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் சிரமம் எதிர்நோக்கியதை ஒப்புக்கொண்டது.

“பிரச்சினையை நாங்கள் அடையாளம் கண்டு, சேவைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளோம்.

“நீங்கள் உங்கள் டிபிஎஸ்/பிஓஎஸ்பி கடன்பற்று அல்லது ரொக்கக் கழிவு அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி பணம் செலுத்தலாம். மாறாக, உங்களுக்கு அருகிலுள்ள தானியக்க வங்கி இயந்திரம் (ஏடிஎம்) இருப்பிடத்தைக் கண்டறிய go.dbs.com/s-locator இணையப்பக்கத்திற்குச் செல்லவும்,” என்று டிபிஎஸ் வங்கி அறுவுறுத்தியது.

வாடிக்கையாளர்களின் பணமும் வைப்புத் தொகையும் பாதுகாப்பாக இருப்பதை அவ்வங்கி உறுதியளித்தது.

சேவைத் தடையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

இரவு 9.10 மணிக்கு டிபிஎஸ் வெளியிட்ட மற்றோர் அறிவிப்பில், அதன் மின்னிலக்கச் சேவைகள் இரவு 7.37 மணிக்கும் 8.03 மணிக்கும் இடையே கட்டங்கட்டமாக வழக்கநிலைத் திரும்பியதாகத் தெரிவித்தது.

எனினும், இரவு 9.25 மணி நிலரப்படி, சில சேவைகள் இன்னும் கிடைக்காததால், சில பயனர்கள் அதிக இடர் விளைவிக்கும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் அறிவிப்பைப் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்