கேர் பேருந்துகளில் மனவளர்ச்சி குன்றியோரின் கைவண்ணம்

2 mins read
c5d9dd4c-4793-404e-a3ca-f17ef39e0d0a
டவுனர் கார்டன் பள்ளியின் (மைண்ட்ஸ்) மாணவர்களும் அவர்களின் கைவண்ணத்தைக் கொண்ட பேருந்தும். - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 3

டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (டிடிஎஸ்), பொதுப் போக்குவரத்து மன்றத்துடன் இணைந்து ‘கேரிங் எஸ்ஜி கம்யூட்டர்ஸ்’ இயக்கத்தின் கீழ், சிறப்புக் கல்வி பள்ளிகளான (ஸ்பெட்) டவுனர் கார்டன் பள்ளியிலும் (மைண்ட்ஸ்) ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில்லிலும் பயிலும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைக் கொண்ட இரண்டு பேருந்துகளை இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி செம்பவாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் காட்சிக்கு வைத்தன.

பேருந்துகளில் உள்ள கலைப்படைப்புகள், மனவளர்ச்சி குறைபாடுகள் உள்ளோரையும் மாற்றுத்திறனாளிகளையும் சித்திரிப்பதுடன் பயணிகள் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதற்கான உதவிக் குறிப்புகளையும் கொண்டுள்ளன.

மனவளர்ச்சி குறைபாடுகள் உள்ளோரும் மாற்றுத்திறனாளிகளும் பொதுப் போக்குவரத்தில், ​​குறிப்பாக ஸ்பெட் பள்ளிகளுக்குச் சேவை செய்யும் பேருந்து வழித்தடங்களில் பயணம் செய்யும்போது எதிர்கொள்ளும் தேவைகளும் சவால்களும் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டது.

டிடிஎஸ் நிர்வாக இயக்குனர் வின்ஸ்டன் டோவும் பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைமை நிர்வாகி லியோவ் யூ சின்னும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பேருந்தில் உள்ளவர்கள் தன்னிடம் அன்பாக நடந்துகொள்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார் ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில் பள்ளியைச் சேர்ந்த மாணவி லாரண்யா செல்வகணபதி, 14. சிறப்புப் பேருந்தில் இவரது கலைப்படைப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு சிறப்புப் பேருந்துகளும் ‘டிடிஎஸ்’ நிறுவனத்தால் இயக்கப்படும். பேருந்து சேவை எண் 173, மைண்ட்ஸ் ஹப் @ ஒய்எம்சிஏ-மைண்ட்ஸ் (YMCA-MINDS) புக்கிட் பாத்தோகிற்கும், பேருந்து சேவை எண் 859, ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில் பள்ளிக்கும் சேவை வழங்கும்.

மனவளர்ச்சி குன்றியவர்களின் குறைபாடுகளைப் பற்றி மேலும் புரிதலைப் பெற்று மேற்கூறிய பள்ளி மாணவர்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்கான வழிமுறைகளை பேருந்து ஓட்டுநர்கள் தெரிந்துகொண்டனர்.

பேருந்து சேவை எண் 173 ஓட்டுநரான 39 வயது இராகவன் பாலகிருஷ்ணன், பேருந்து ஓட்டுநர்களாகப் பணிபுரிபவர்களுக்குத் தங்களது பயணிகளைக் கவனித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் சில பயணிகளுக்கு மற்றவர்களைவிட சற்று கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது என்றும் கூறினார். மேலும் அவர் பயணிகளின் பாதுகாப்பான, வசதியான பயணத்திற்குத் தாங்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கேர் பேருந்து முயற்சியின் ஒரு பகுதியாக, செம்பவாங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ‘டிடிஎஸ்’ நிறுவனத்தால் நடத்தப்படும் பொதுப் பேருந்து உள்ளடக்கிய பாடத்திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். மனவளர்ச்சி குன்றிய பயணிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் எளிய திறன்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன.

செம்பவாங் உயர்நிலைப் பள்ளியின் மாணவி குகன் மோகனம், 15, தன்னைப் போல் இருக்கும் மற்ற இளைஞர்களும் மாற்றுத்திறனாளிகளை பற்றியும் மனவளர்ச்சி குறைபாடுகள் உள்ளோரைப் பற்றியும் விழிப்புணர்வை மேம்படுத்திக்கொள்வதோடு, தாங்கள் கற்றுக்கொண்ட புதிய கருத்துகளைத் தங்களைச் சுற்றியிருப்போரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.

“அதன்வழி நாம் சுற்றியிருப்பவர்கள்மீது அதிக அக்கறை காட்ட முடியும். அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்க முடியும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்