சர்க்கிட் சாலை ஈரச் சந்தையில் உள்ள உணவுக் கடை ஒன்றில் கிட்டத்தட்ட ஓராண்டு தங்கியிருந்த 15 வயதுப் பெண் ஒருவர் தற்பொழுது மருத்துவமனையில் நலமாக உள்ளார் என்று மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் கூறியுள்ளார்.
இது குறித்து மே 3ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட திருவாட்டி டின், அந்தப் பெண் நலமாக உள்ளார் என்றும் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“அவர் தன்னிடம் உள்ள மென்மையான விளையாட்டுப் பொருள்களைக் காண்பித்தார். அத்துடன் ஒரே சிகிச்சைப் பிரிவில் உள்ள சக நோயாளி ஒருவர் தனக்குத் தந்த பொக்கிமோன் அட்டையையும் அவர் காட்டினார்,” என்று திருவாட்டி டின் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் தந்தை அவரை அடிக்கடி மருத்துவமனையில் சந்திக்க வருவதாகக் கூறிய திருவாட்டி டின், அவர் சிறார், இளையர்கள் சட்டத்தின்கீழான விசாரணையில் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் நீண்டகால பராமரிப்புக்குச் சமுதாய, குடும்ப மேம்பாடு அமைச்சு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக திருவாட்டி டின் விளக்கினார்.
“இதில் தெரிவுகள் உள்ளன. அதில் ஒன்று அந்தப் பெண்ணுக்கு அக்கறையுடன் கூடிய பராமரிப்பு வழங்குவதே சிறந்த தேர்வாக இருக்கும்,” என்று அவர் கருத்துரைத்தார். இதில் அந்தப் பெண்ணைப் பராமரிக்க அமைச்சு தனது பராமரிப்பு வட்டத்தை அணுகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆவர். அவர்கள் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் தந்தை ஒற்றைப் பெற்றோர் என்றும் அவர்களின் ஈரச் சந்தைக் கடை இருப்பிடத்திலிருந்து தள்ளியிருப்பதாலும் அவர் தமது பெண் ஈரச் சந்தை உணவுக் கடையில் தங்கியிருக்க ஏற்பாடு செய்ததாகவும் தாம் அறிந்ததாக திருவாட்டி டின் தெளிவுபடுத்தினார்.

