வாழ்க்கையில் நிம்மதி தருவது எது?: ஆராய்ந்தது பட்டிமன்றம்

2 mins read
1ac6da33-50d2-4234-a400-32fdefd47fc3
பட்டிமன்ற பங்கேற்பாளர்கள்.  - படம்: ஹில்வியூ இந்திய நற்பணி செயற்குழு

ஒன்றோடு ஒன்று மோதிய பட்டிமன்ற அணிகளின் சொல்வீச்சுக்கு இடையிலும் நண்பர்களாகவும் தமிழ் ஆர்வலர்களாகவும் இருக்கும் அதன் பங்கேற்பாளர்களின் மொழிகளில் குதூகலமும் கொண்டாட்ட உணர்வும் நிரம்பின.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் நிகழ்ச்சிகளைத் தடபுடலாக நடத்தி வரும் ஹில்வியூ இந்திய நடவடிக்கைகள் செயற்குழு, தமிழ் மொழியை வளர்ப்பதற்கான பட்டிமன்றத்தை முதன்முறையாக நடத்தியுள்ளது.

ஹில்வியூ சமூக மன்றத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்திய நடவடிக்கைகள் செயற்குழுவுடன் ‘விஎஸ்டிகே’ எனப்படும் வளமான, சிறப்பான, திவ்யமான குடும்பம் என்ற அறப்பணி அமைப்பின் ஆதரவுடன் அரங்கேறியது.

கருத்துச்செறிவு மிக்க இந்தப் பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்ததில் மகிழ்வதாக ஹில்வியூ இந்திய நடவடிக்கைகள் செயற்குழு ஆலோசகர் பிரமிளா வி. கிலிட்டஸ் கூறினார்.

“தமிழ்ப் பேச்சை ஊக்குவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளே இதனைத் தொடர்ந்து வாழும் மொழியாக்குகிறது,” என்றார் அவர்.

‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடலை பெருமாள் அமளி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திலகராணி ராஜலிங்கம், தொடக்கவுரை ஆற்றினார்.

(இடமிருந்து) பட்டிமன்ற மேடையில் பேச்சாளர்கள் திரு மணிகண்டன், திரு முருகையன், திருவாட்டி சுமதி, திரு தமிழவேல், நடுவர் கோ.கணபதி, திரு பிரம்மகுமார், திருவாட்டி அமலி, திரு தியாகராஜன், திருவாட்டி திலகராணி
(இடமிருந்து) பட்டிமன்ற மேடையில் பேச்சாளர்கள் திரு மணிகண்டன், திரு முருகையன், திருவாட்டி சுமதி, திரு தமிழவேல், நடுவர் கோ.கணபதி, திரு பிரம்மகுமார், திருவாட்டி அமலி, திரு தியாகராஜன், திருவாட்டி திலகராணி - படம்: ஹில்வியூ இந்திய நற்பணி செயற்குழு

‘மனித வாழ்வில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவது எது?’ என்ற தலைப்பில் நடந்தேறிய பட்டிமன்றத்தில் ‘போதிய பணமா?’ என்று ஓர் அணியும் ‘புரிந்துகொள்ளும் மனமா?’ என்று மற்றோர் அணியும் விவாதித்தன.

நிகழ்ச்சியைச் சிறப்பித்த ஹில்வியூ சமூக மன்ற நிர்வாகக் குழு இணைத் தலைவர் ரிச்சர்ட் லிம், தமக்கு தமிழ் பேசத் தெரியாது என்றாலும் இந்திய ரோஜாக் சாப்பிடுவது முதல் வீட்டில் தாம் செய்யும் விநாயகர் வழிபாடுவரை தமிழ்ப் பண்பாடு தம்மைச் சூழ்வதாகக் கூறினார்.

இத்தகைய நிகழ்ச்சிகள் பிள்ளைகளுக்கு வருங்கால நிகழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறி இந்திய நடவடிக்கைகள் செயற்குழுத் தலைவர் குணசேகரனும் ஆலோசகர் பிரமிளாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

‘போதிய பணமா?’ அணியில் திரு தமிழவேல், திருவாட்டி சுமதி, திரு முருகையன், திரு மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றனர். ‘புரிந்துகொள்ளும் மனமா?’ என்ற அணியில் திரு பிரம்மகுமார், திருவாட்டி பெருமாள் அமலி, திரு தியாகராஜன், திருவாட்டி திலகராணி ராஜலிங்கம் ஆகியோர் இடம்பெற்றனர். போட்டியில் இரண்டாவது அணியினர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

‘தமிழ்மாமணி’, ‘திருக்குறள் வளர்ச்செம்மல்’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்ரமணியன், பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டார்.

தமிழகத்தில் பேச்சுமொழி தமிழாக இருந்தாலும் ஆங்கில வார்த்தை அதிகமான கலப்பு இருக்கும் பட்சத்தில் சிங்கப்பூர்த் தமிழர்கள் கூடுமானவரையில் தமிழைத் தூய்மையாகப் பேச முடிவதைக் கண்டு மனமகிழ்வதாக அவர் கூறினார்.

பட்டிமன்றத்தில் ஏறத்தாழ 250 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் யூடியூப் நேரலை, 1,000க்கும் அதிகமானோரை ஈர்த்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியை நேரலையாக கண்டு ரசித்ததாக பார்வையாளர் எஸ்.விஜயராஜன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்