தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலம் காக்க பணிப்பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முதலாளிகள்

3 mins read
ae0b0b08-6f93-45be-b853-75b0a6b5432d
சக வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு உதவ பணிப்பெண்கள் சிலர் தொண்டூழியர்களாக செயல்படுகின்றனர். அவர்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மனிதாபிமான அமைப்பின் சிட்டி பிளாசா அலுவலகத்திலிருந்து செயல்படும் 43 வயது திருவாட்டி இஸ்திரியாந்தியும் ஒருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணிப்பெண்களின் மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உதவி நாடும் முதலாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக உள்ளூர் முகவைகள் தெரிவித்துள்ளன.

இது வரவேற்கத்தக்கது என்று அவை குறிப்பிட்டன. சிங்கப்பூர் முதலாளிகள் கூடுதல் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பதையும் பணிப்பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான முக்கியத்துவத்தைப் புரிந்துவைத்திருப்பதையும் இது காட்டுவதாக முகவைகள் தெரிவித்தன.

பணிப்பெண்களின் மனநிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதுகுறித்து முதலாளிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை வெளிநாட்டுப் பணிப்பெண் சங்கத்தின் (சமூக ஆதரவு மற்றும் பயிற்சி) தலைமை நிர்வாக அதிகாரி திரு சுபாஷ் பிரிட்மானி சுட்டினார்.

தங்களது பணிப்பெண்ணுக்கு எவ்வாறு உதவி செய்வது என்பது குறித்து அறிந்துகொள்ள மேலும் பல முதலாளிகள் அழைப்பதாகச் சங்கத்தின் சமூக ஆதரவுப் பிரிவின் மூத்த நிர்வாகி திருவாட்டி ஷேரன் ரோஜர்ஸ் தெரிவித்தார்.

தங்களது பணிப்பெண்களை உற்சாகப்படுத்த, பணிப்பெண்கள் நிலையம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சில சமயங்களில் பணிப்பெண்களுடன் அவர்களது முதலாளிகளும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகப் பணிப்பெண்கள் நிலையத்தை மேற்பார்வையிடும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வெளிநாட்டு ஊழியர் பிரிவு இயக்குநர் திரு மைக்கல் லிம் கூறினார்.

“கடந்த ஆண்டு கரையோரப் பூந்தோட்டத்தில் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தையொட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பணிப்பெண்களுடன் அவர்களது முதலாளிகளும் முதலாளிகளின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,” என்று திரு லிம் தெரிவித்தார்.

தங்கள் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் நலன் கருதி அவர்களுக்கு உதவி கேட்டு அழைக்கும் முதலாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான மனிதாபிமான அமைப்பும் கூறியது.

“தங்களது பணிப்பெண் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கூடும் என்றும் அவருடன் தாய்மொழியில் பேசி உதவி செய்ய யாராவது இருக்கிறார்களா என்று முதலாளிகள் பலர் கேட்கின்றனர்,” என்று அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்டெஃபனி சோக் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டுப் பணிப்பெண்கள் ஆகியோருக்குத் தேவைப்பட்டால் முழுமையான மனநலச் சேவைகள் உடனடியாகக் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களது மனநலத்துக்கு ஆதரவு வழங்குவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சிங்கப்பூரில் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு புதிய வெளிநாட்டு ஊழியர்களுக்கென்றே ஒரு திட்டம் நடத்தப்படுவதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். தங்கள் உரிமை, பொறுப்புகள், மனவுளைச்சலை எவ்வாறு எதிர்கொள்வது, உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய சேவைகள் ஆகியவை குறித்து அவர்களுக்கு இத்திட்டம் மூலம் சொல்லிக்கொடுக்கப்படும் என்றார் அவர்.

“வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டுப் பணிப்பெண்கள் ஆகியோருக்கு அவர்களது தாய்மொழியில் உதவி மற்றும் ஆலோசனை வழங்க வெளிநாட்டு ஊழியர்கள் மையம், பணிப்பெண்கள் நிலையம் போன்ற அரசு சார்பற்ற அமைப்புகளுடன் மனிதவள அமைச்சு மிக அணுக்கமாக ஒன்றிணைந்து செயல்படுகிறது,” என்று மனிதவள அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கூடுதல் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் மனிதவள அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

எஸ்ஜிவொர்க்பாஸ் விண்ணப்பம் மற்றும் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான வாட்ஸ்அப் குழு வாயிலாகப் பணிப்பெண்கள் உதவி நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்