சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய மாமன்னர்

2 mins read
83b2a62b-4b58-4b59-a83a-fca99102406a
சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர். அவருடன் அவரது துணைவியார் ராஜா ஸரித் சோஃபியாவும் வருகிறார். - படம்: ஏஎஃப்பி

மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பை ஏற்று சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். மே 6ஆம் தேதியிலிருந்து மே 7ஆம் தேதி வரை அவர் சிங்கப்பூரில் இருப்பார்.

ஜனவரி 31ஆம் தேதி அரியணை ஏறிய பிறகு, இதுவே மாமன்னர் இப்ராகிமின் முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமாகும்.

அதுமட்டுமல்லாது, சிங்கப்பூரில் தலைமைத்துவம் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு அவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மே 15ஆம் தேதியன்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

மாமன்னரின் இந்தப் பயணம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வலுவான நல்லுறவைப் பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சு மே 5ல் தெரிவித்தது.

மாமன்னருடன் அவரது துணைவியாரான ராஜா ஸரித் சோஃபியா, மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், மூத்த அதிகாரிகள் ஆகியோர் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.

மே 6ஆம் தேதியன்று மாமன்னருக்கும் அவரது துணைவியாருக்கும் இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்படும். அதன் பிறகு அதிபர் மாளிகையில் அவர்களுக்கு அதிகாரபூர்வ விருந்துபசரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் லீ சியன் லூங்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தனித்தனியே விருந்தோம்பல் வழங்கி மாமன்னரையும் அவரது துணைவியாரையும் சந்தித்துப் பேசுவர்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை மாமன்னர் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தை மாமன்னர் நேரில் காண்பார்.

போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட்டுடன் மாமன்னர் இப்ராகிம் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையைப் பார்வையிடுவார்.

குறிப்புச் சொற்கள்