அட்சய திருதியையில் நகைவாங்க முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்

அட்சய திருதியை நாளில், வாடிக்கையாளர்கள் பலர் நகைக் கடைகளுக்குச் சென்று தள்ளுபடி விலையில் நகை வாங்க முற்படுவது வழக்கம்.

‘அட்சய’ என்ற சொல்லுக்கு அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள் கூறுவர். அதற்கேற்ப வாடிக்கையாளர்கள் பலரும் இந்த நாளில் நகை வாங்கினால் தங்களிடம் நகை சேரும் என்றும் இந்த நாளில் தங்­கம் வாங்­கி­னால் ஆண்டு முழு­வ­தும் தங்­கம் வாங்கிக்கொண்டே இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு மே 10ஆம் தேதி அட்சய திருதியை நாளாகும். அதை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் அன்று வாங்க விரும்பும் நகைகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை சில நகைக்கடைகள் அறிவித்துள்ளன.

அவ்வகையில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) பிற்பகல் நேரத்தில் லிட்டில் இந்தியாவில் இருக்கும் பல நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

அட்சய திருதியை நாளில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும்; பிடித்த நகையை வாங்க முடியாமல் போய்விடக்கூடும் என்ற எண்ணத்தில் பலர் தங்களுக்குப் பிடித்த நகைகளுக்கு முன்பதிவு செய்தனர்.

“ஒவ்வோர் ஆண்டும் அட்சய திருதியைக்கு வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து நகை வாங்குவது வழக்கம். சில வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே நகைகளை முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகமான வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்,” என்று ஏபிஜே அபிராமி பாப்புலர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையின் மூத்த மேலாளர் ஆறுமுகம் செல்லத்துரை, 53, தெரிவித்தார்.

“நான் வழக்கமாக ஏபிஜே அபிராமி பாப்புலர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையில்தான் நகைகளை அதிகம் வாங்குவேன். என் தாயார் அட்சய திருதியை அன்று நகைகள் வாங்கினால் சிறப்பு என்று கூறியுள்ளார். அட்சய திருதியை நாளன்று வந்து வாங்கினால் எனக்குப் பிடித்த நகைகள் கடையில் இல்லாமல் போகக்கூடும். மேலும், இங்கு அட்சய திருதியைக்காகப் பல வடிவங்களில் புதிய நகைகள் விற்பனைக்கு வருகின்றன. தள்ளுபடியும் வழங்கப்படுகிறது,” என்றார் சுயதொழில் செய்யும் மோகன் சங்கீதா, 32.

டிஎம்ஒய் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையிலும் அட்சய திருதியைக்காக வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தங்க விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்களின் கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் வீட்டில் நடைபெறவிருக்கும் சிறப்புக் கொண்டாட்டத்திற்கு நகைகள் வாங்க வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொண்டனர்.

“நான் சிங்கப்பூரில் பத்தாண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வழக்கமாக டிஎம்ஒய் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையில் நகைகள் வாங்குவேன். இந்த ஆண்டு அட்சய திருதியை நேரத்தில் என் மகளின் பிறந்தநாள் வரவிருப்பதால் சிறப்புத் தள்ளுபடியில் நகைகளை முன்பதிவு செய்ய வந்துள்ளேன்,” என்று விற்பனை மேலாளராகப் பணியாற்றும் பிரேம்குமார் தினேஷ்குமார், 34, சொன்னார்.

“நகை விலை ஏற்றம் கண்டுள்ளதால் அட்சய திருதியைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட இப்போது குறைந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை நகை விலை இந்த ஆண்டு குறையாது என்றுதான் நினைக்கிறன். இருந்தாலும் வாடிக்கையாளர்களைக் கவர நாங்கள் பல தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.” என்று டிஎம்ஒய் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையின் செயலாக்க நிர்வாகி சலீம் மாலிக், 33, கூறினார்.

“நான் பத்தாண்டுகளாக அட்சய திருதியைக்கு லிட்டில் இந்தியாவில் இருக்கும் ஜோயாலுக்காஸ் ஜுவெல்லரி கடையில் நகைகளை வாங்கிவருகிறேன். அட்சய திருதியையில் நகைகள் வாங்கினால் நகைகள் அதிகமாக சேரும் என்பது நம்பிக்கை,” என்று நகைகளை முன்பதிவு செய்ய வந்த வாடிக்கையாளர் இளவழகன் இளமதி, 45, குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!