தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரலில் வீவக வீடுகளின் மறுவிற்பனை எண்ணிக்கை அதிகரிப்பு, ஏழாவது மாதமாக விலையேற்றம்

3 mins read
b8661390-4794-4b22-8510-2635d2594ded
லோரோங் 1A தோ பாயோவில் உள்ள வீவக டிபிஎஸ்எஸ் வீடு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை எண்ணிக்கை இரண்டு மாத சரிவுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கூடியுள்ளது.

தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளின் அறிமுகம் குறைந்ததால் புதிய வீடுகளின் விநியோகம் குறைந்தது. வீடு வாங்குவோர் சிலர் மறுவிற்பனை சந்தைக்குத் திரும்பியதால் எண்ணிக்கை அதிகரித்ததாக ஹட்டன்ஸ் அண்ட் ஆரஞ்ச்டீ சொத்து ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (மே 6ஆம் தேதி) வெளியிடப்பட்ட எஸ்.ஆர்.எக்ஸ் , 99.co. தளங்களின் கணிப்பின் அடிப்படையிலான இந்தத் தரவுகள், ஏப்ரல் மாதத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 2,387 ஆக 15.7 விழுக்காடு உயர்ந்து இருப்பதைக் காட்டின. ஆண்டு அடிப்படையில் எண்ணிக்கை 9 விழுக்காடு உயர்ந்தது.

தேவையின் அதிகரிப்பு மறுவிற்பனை வீட்டு விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. ஏழாவது மாதமாக வீட்டு விலை ஏற்றம் கண்டது. ஏப்ரல் மாதத்தில் 0.9 விழுக்காடும் இந்த ஆண்டில் 6 விழுக்காடும் விலை உயர்ந்தது.

“முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள மானியங்கள், அவர்களுக்கு மறுவிற்பனை வீடு வாங்குவதை எளிதாக்கியுள்ளதுடன் அவர்களுக்கு கட்டுப்படியாகக் கூடியதாகவும் உள்ளது,” என்று ஆரஞ்ச்டீ குழுமத்தின் தலைமை ஆய்வாளர் கிறிஸ்டின் சன் கூறினார்.

உலகப் பொருளியல் அதிகரிப்பும் வீடு வாங்குபவர்களை ஊக்குவித்திருக்கலாம் என்றும் அவர் சுட்டினார்.

முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சி அடையாத பேட்டைகள் இரண்டிலும் உள்ள வீடுகளில் விலை முறையே 0.9 விழுக்காடும் 0.4 விழுக்காடும் உயர்ந்தன. ஆண்டு அடிப்படையில், முதிர்ச்சியடைந்த பேட்டையில் விலை 5.9 விழுக்காடு அதிகரித்து, முதிர்ச்சி அடையாத பேட்டையில் 5.6 விழுக்காடு அதிகமாக இருந்தது.

பெரும்பாலும் எல்லா வகையான வீடுகளும் விலை கூடியுள்ளன. எக்சிகியூட்டிவ் வீட்டு விலை மிக அதிகமாக, 2.3% உயர்ந்து. மூன்று அறை, நான்கு அறை வீடுகள் முறையே 1.2 விழுக்காடும் 1.1 விழுக்காடும் ஏற்றம் கண்டன. எனினும், ஐந்து அறை வீடுகளின் மறுவிற்பனை விலை 0.3 விழுக்காடு குறைந்தன.

ஆண்டு அடிப்படையில் நான்கு அறை வீடுகளின் விலை 7.1 விழுக்காடு உயர்ந்தது.மூன்று அறை வீட்டு விலை 6.2 விழுக்காடு கூடியது. எக்சிகியூட்டிவ் வீட்டு விலை 5.7 விழுக்காடு உயர்ந்தது. ஐந்து அறை வீட்டு விலைகள் இவ்வாண்டில் 4.5 விழுக்காடு அதிகமாக இருந்தன.

மூன்றில் இரண்டு பங்குக்கும் (62.1 விழுக்காடு) குறைவான மறுவிற்பனை வீடுகள் முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் அமைந்துள்ளவை. மீதமுள்ள 37.9 விழுக்காடு முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் இருப்பவை. வீட்டு வகையைப் பொறுத்தவரை, நான்கு அறை வீடுகள் 45.1 விழுக்காடு, மூன்று அறை வீடுகள் 25.7 விழுக்காடு, ஐந்து அறை வீடுகள் 23.4 விழுக்காடு, எக்சிகியூட்டிவ் வீடுகள் 5.8 விழுக்காடு பங்கு வகித்தன.

ஏப்ரல் மாதத்தில் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீவக மறுவிற்பனை வீடு, லோரோங் 1A தோ பாயோவில் உள்ள ஐந்து அறை வீடாகும். அது $1.438 மில்லியனுக்கு விற்கப்பட்டது. முதிர்ச்சி அடையாத பேட்டையில், ஆக அதிகமாக பரிவர்த்தனை செய்யப்பட்ட விலை, தோ குவான் ரோட்டிலுள்ள எக்சிகியூட்டிவ் வீட்டுக்கான $1.088 மில்லியன் ஆகும்.

குறைந்தது $1 மில்லியனுக்கு மறுவிற்பனை செய்யப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 68 ஆக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் பதிவான 61 வீடுகளைவிட இது அதிகம். இந்த வீடுகள் மாதத்தின் மொத்த மறுவிற்பனை எண்ணிக்கையில் 2.8 விழுக்காடாகும்.

குறிப்புச் சொற்கள்