கடத்தல் நாடகமாடி உறவினரிடமிருந்து பணம் பறிக்க முயன்றவருக்குச் சிறை

கடத்தல் நாடகமாடி உறவினரிடமிருந்து பணம் பறிக்க முயன்றவருக்குச் சிறை

1 mins read
90cd9496-83b9-4e12-8cbc-81fd815fe8cc
குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூ சாங்ஜியாங்கிற்கு மே 6ஆம் தேதியன்று 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏறத்தாழ $30,000 இழந்த சுற்றுப்பயணி ஒருவர் தமது உறவினரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றார்.

தம்மை யாரோ கடத்திவிட்டதாக சீனாவில் இருந்த தமது உறவுக்காரப் பெண்ணிடம் சீன நாட்டவரான 33 வயது லியூ சாங்ஜியாங் பொய் கூறினார். தம்மை விடுவிக்க அவர்கள் 30,000 யுவான் (S$5,600) கேட்பதாகவும் அதை அனுப்பிவைக்குமாறும் அப்பெண்ணிடம் லியூ கேட்டுக்கொண்டார்.

ஆனால் லியூ கேட்ட பணத்தை அப்பெண் அனுப்பிவைக்கவில்லை.

மாறாக, இதுகுறித்து லியூவின் தந்தையிடம் அவர் தெரிவித்தார்.

அப்போது சீனாவில் இருந்த லியூவின் தந்தை, இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்,

இந்நிலையில், லியூவை யாரும் கடத்தவில்லை என்றும் அவர் பொய் கூறினார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவுக்கு மே 6ஆம் தேதியன்று 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்