தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்திலுக்கு நம்பிக்கையளித்த அமைச்சர் சான்

2 mins read
ba5ad354-15ec-4fd5-b2a4-51f62b68ac5a
கடை மூடப்படும் செய்தி கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கின் கவனத்துக்கும் சென்றதால், கடந்த வாரயிறுதியில் ஹாலந்து வில்லேஜ் பகுதிக்குச் சென்று திரு செந்தில்முருகனைச் சந்தித்து அமைச்சர் சான் (இடம்) ஆறுதல் கூறினார்.  - படம்: சான் சுன் சிங் ஃபேஸ்புக்

ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமை (மே 5) இரவு 9.20 மணியளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.

கடை மூடப்படும் செய்தி காட்டுத் தீயாகப் பரவி, அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள், முன்பு ஹாலந்து வில்லேஜ் பகுதியில் குடியிருந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் ‘தம்பி’ சஞ்சிகைக் கடைக்குத் திரளாக வந்து அக்கடையின் உரிமையாளர் பெரியதம்பி செந்தில்முருகனுக்கு (சேம்) ஆறுதல் கூறினர்.

இச்செய்தி கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கின் கவனத்துக்கும் சென்றதால் அமைச்சர் சான், கடந்த வார இறுதியில் ஹாலந்து வில்லேஜ் பகுதிக்குச் சென்று திரு செந்தில்முருகனைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமது கடையை மீண்டும் திறக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது அதே ஹாலந்து வில்லேஜ் பகுதியில்தான் கிடைக்க வேண்டும் என்று திரு செந்தில்முருகன் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் வலியிறுத்திக் கூறியிருந்தார்.

‘தம்பி’ சஞ்சிகை கடைக்குச் சென்ற அமைச்சர் சான், செந்தில்முருகனிடம், அந்தப் பகுதியில் அவரது கடை மீண்டும் திறக்கும் சாத்தியம் பற்றி பேசியதாக திரு சான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (மே 6) குறிப்பிட்டிருக்கிறார்.

“ஹாலந்து வில்லேஜ் பகுதியில் சேம் மீண்டும் தமது வர்த்தகத்தை நடத்துவது பற்றி அமைப்புகளுடனும் உத்தேச பங்காளிகளுடனும் பேசி வருகிறோம். இப்போது பெய்துகொண்டிருக்கும் மழை, வாழ்த்து மழையாக மாறி நல்ல செய்தியைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று திரு சான் மேலும் தமது பதிவில் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்