திவாலான ஒருவர், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மூன்று நிறுவனங்களின் இயக்குநரை ஏமாற்றியிருக்கிறார்.
2021ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் வெள்ளியை ஏமாற்றி சுருட்டியிருக்கிறார்.
சிங்கப்பூரரான வோங் போ குன், சதித்திட்டம் தீட்டி ஏமாற்றிய பணத்தில் 1.25 மில்லியன் வெள்ளியை பெயர் குறிப்பிடாத மலேசியாவில் உள்ள 3வது தரப்புக்கு மாற்றியிருக்கிறார். எஞ்சிய $250,000 பணத்தை அவருக்கு உடந்தையாக இருந்தவர் தனது சொந்தச் செலவுக்காக வைத்துக் கொண்டார்.
மே 6ஆம் தேதி 70 வயது வோங் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வோங் பல நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்தது தெரிய வருகிறது.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி, ஏபியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் விசிசி, ஏபியல் ஹோல்டிங்ஸ், ஏபியல் ஸ்பேஸ்பிளஸ் அல்ஜுனிட் ஆகிய நிறுவனங்களில் இயக்குநராக இருந்த 48 வயது நபரிடம் ஏமாற்றிய பணத்தை வோங் திருப்பிக் கொடுக்கவில்லை.
தனக்கு உடந்தையாக இருந்த வின்செண்ட் ஜேசன் சடோக் ஃபூக் தாய் என்பவர் மூலம் பாதிக்கப்பட்டவரை வோங் சந்தித்தார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

