தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்

2 mins read
b1b6b412-7585-445b-8967-04b32b0dbc6b
நாடாளுமன்றத்தில் மலேசிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தருடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
multi-img1 of 2

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் மே 7ஆம் தேதி பிற்பகல் 12.10 மணிக்குத் தமது பேராளர் குழுவுடன் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை அடைந்தார்.

நாடாளுமன்றத்துக்கு மாமன்னர் வந்திருப்பது குறித்து நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் அறிவித்தார். கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரையும் அவருடன் வந்திருந்த பேராளர் குழுவையும் வரவேற்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற அமர்வை மாமன்னர் நேரில் கண்டார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கூடியபோது அங்கு சென்று அதை நேரில் பார்த்த முதல் மலேசிய மாமன்னர் எனும் பெருமை அவரைச் சேரும்.

மாமன்னர் இப்ராகிம் சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது சிங்கப்பூர் பயணம் மே 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மாமன்னர் இப்ராகிம், சிங்கப்பூர்-மலேசியா இடையிலான நல்லுறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் இருநாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர் என்று திரு சியா தெரிவித்தார்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நல்லுறவு வலுவாக இருக்கும் நிலையில் மாமன்னர் இப்ராகிமின் சிங்கப்பூர் பயணம் தனிச்சிறப்புவாய்ந்ததாக அமைகிறது என்று திரு சியா புகழாரம் சூட்டினார்.

மலேசிய மாமன்னராக அரியணை ஏறுவதற்கு முன்பு, சுல்தான் இப்ராகிம் ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்ததாகக் குறிப்பிட்ட திரு சியா, கொவிட்-19 நெருக்கடிநிலையின்போதும் அவரது ஆட்சியில் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான பங்காளித்துவம் வலுவடைந்ததாகக் கூறினார்.

மலேசியா-சிங்கப்பூர் எல்லைகள் பயணிகளுக்கு மூடப்பட்டிருந்தபோதிலும் விநியோகச் சங்கிலி தடைப்படாமல் இருக்க ஜோகூரும் சிங்கப்பூரும் மிக அணுக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டதைத் திரு சியா நினைவுகூர்ந்தார்.

இதற்காக 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ முனைவர் பட்டமளித்து கௌரவித்ததைத் திரு சியா சுட்டினார்.

சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான ரயில் சேவை 2026ஆம் ஆண்டிறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் மக்களிடையிலான உறவை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் வாயிலாக சிங்கப்பூர் நிறுவனங்கள் ஜோகூரில் வர்த்தகம் செய்வது எளிதாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் ஜோகூர் பாலம் கட்டப்பட்டு, வரும் ஜூன் மாதத்துடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. ஜோகூர் பாலத்தின் நூற்றாண்டு விழாவை சிங்கப்பூர் கொண்டாடும் என்றார் திரு சியா.

அதுமட்டுமல்லாது, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 60வது ஆண்டு விழா 2025ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்