பிரதமர் பதவியிலிருந்துதான் விலகுகிறேன், ஓய்வு பெறவில்லை: பிரதமர் லீ

2 mins read
f1a5a0d9-3291-4800-a53f-b96ea4d9568d
சிலர் தமது ஓய்வுக்காலம் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக் கூறியதைக் குறிப்பிட்ட பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்), தாம் ஓய்வுபெறவில்லை என்று மே 7ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாத மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் தாம் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு வகிக்கப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றப் போவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

மே 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகத் திரு லாரன்ஸ் வோங் பதவியேற்கவிருக்கிறார்.

இந்நிலையில், தமது ஓய்வுக்காலம் மகிழ்ச்சிகரமாக அமையச் சிலர் வாழ்த்துக் கூறியதைக் குறிப்பிட்ட பிரதமர் லீ, தாம் ஓய்வுபெறவில்லை என்று மே 7ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தினார்.

“நான் பிரதமர் பதவியிலிருந்துதான் விலகுகிறேன். பணியாற்றுவதை நிறுத்தவில்லை! அரசாங்கத்தில் தொடர்ந்து பங்களிக்கும் வேளையில் அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையைத் தொடர்வேன்.

“புதிய பிரதமர் லாரன்சும் அவரது குழுவினரும் வெற்றிபெற என்னால் ஆன அனைத்து விதங்களிலும் உதவுவேன்,” என்று திரு லீ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகத் தம்மைப் பாராட்டியும் ஊக்குவிக்கும் விதமாகவும் பலரும் குறுந்தகவல் அனுப்புவதாக அவர் கூறினார். பெரும்பாலோர், அரசாங்கக் கொள்கைகளால் தங்கள் வாழ்க்கை எவ்வாறு மேம்பட்டுள்ளது என்றும் சிங்கப்பூரர்கள் என்ற முறையில் தாங்கள் பெருமிதம் கொள்வதாகவும் பகிர்ந்துகொண்டதாகத் திரு லீ சொன்னார்.

“நாட்டை உருவாக்குவது என்பது எளிதான செயல் அன்று. கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் உங்களின் விசுவாசமும் ஆதரவும் இல்லாமல் நாம் இந்த அளவு சாதித்திருக்க இயலாது. உங்களில் பலரும் சமூகத்திற்குத் திருப்பி அளிப்பதையும் அவரவர் வழியில் சமுதாயத்திற்குப் பங்களிப்பதையும் கேள்விப்படும்போது நெகிழ்ச்சி அடைகிறேன்,” என்று பிரதமர் லீ கூறினார்.

இங்கு வேலைபார்க்கும் சிங்கப்பூரர் அல்லாதவர்களிடமிருந்தும் குறுந்தகவல்கள் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, “நல்ல வேலையைத் தேடிக்கொள்ளவும் பாதுகாப்பான முறையில் குடும்பத்தைப் பேணவும் நாட்டுக்கும் பொருளியலுக்கும் பங்களிக்கவும் சிங்கப்பூரைப் பாதுகாப்பான, மகிழ்ச்சியான வசிப்பிடமாக நீங்கள் தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.

மே 1ஆம் தேதி ஆற்றிய மே தினப் பேரணி உரையில், நாட்டைச் சீரொழுங்குடன் தமக்கு அடுத்துப் பதவியேற்பவரிடம் ஒப்படைக்கத் தயாராகும் வேளையில் திருப்தியோடு மனநிறைவையும் உணர்வதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

மே 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இஸ்தானாவில் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொள்வார்.

குறிப்புச் சொற்கள்